தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-அரசுக - 13




எண்சீர் ஆசிரிய விருத்தம் மடக்கு

அரசுக விதையாரும் பரசுக விதையாரும்
அடையமை மானாரும் புடையமை மானாரும்
வரமா சடையாரும் உரமா சடையாரும்
வயமா திரத்தாரும் புயமா திரத்தாரும்
கரமணி வடத்தாரும் சிரமணி வடத்தாரும்
களிமறைப் பரியாரும் ஒளிமறைப் பரியாரும்
அரிபதி யானாரும் கிரிபதி யானாரும்
அடியார் மாவாரும் கடியார் மாவாரே.                  (13)

(இ-ள்) அரசு கவிதை யாரும் - திருநாவுக்கரசின் தேவாரத்தை உடையாரும்,

தலைமை வாய்ந்த தோத்திரப் பாக்களை உடையாரும். (எனினுமாம்)

பர சுக விதையாரும் - மேலான இன்பத்திற்கு விதையாயிருப்பவரும்.

அடை அமை மானாரும் - அடைக்கலமாகக் கையில் அமைந்த மானை உடையவரும், புடை அமை மானாரும் - (இடப்) பக்கத்தே அமர்ந்த (மான் போன்ற) பார்வதியை உடையவரும்.

வரம் மா சடையாரும் - மேலான பெரிய சடையை யுடைய வரும்.

உரம் மாசு அடையாரும் - வலிமை மிகுந்த மும்மலங்கள் அடையப்பெறாதவரும், வய - வலி பொருந்திய, மாதிரத்தாரும் - யானைத்தோலைப் போர்வையாக உடையாரும், புயமாதிரத்தாரும் - எட்டுத் திக்குகளைத் தோள்களாக உடையவரும் (திகம்பரரும்), கரம் அணி வடத்தாரும் - கையைச் சின் முத்திரையாகக் காட்டிக் கல்லால மரத்தின் கீழ் இருந்தவரும் (வடம் - கல்லாலமரம்.) (கல்லாலமரத்தின்கீழ் இருப்பவர் தட்சிணாமூர்த்தி)

சிரம் அணி வடத்தாரும் - தலையில் சிவக் கண்மணிவடத்தை உடையாரும்,

களி மறைப் பரியாரும் - செருக்குடைய வேதங்களின் (உருவடைந்த) குதிரையை உடையாரும்.  திரிபுரத்தை எரித்தபோதும், மணிமொழியார் பொருட்டுத் தாம் ஏறிவந்தபோதும் வேதங்கள் குதிரைகளாயின.

ஒளி மறைப்ப அரியாரும் - பிறரால் மறைத்தற்கு அரிய ஒளியுடையாரும். மறைப்ப என்புழி அகரம் தொக்கது.

அரிபதிஆனாரும் - சத்தியாகிய திருமாலுக்குச் சத்தனாயிருப்பவரும்.

கிரி பதி ஆனாரும் - வெள்ளி மலையை உறைவிடமாகக் கொண்ட வரும்.

அடியார் மாவாரும் - அடியார்களின் செல்வமா யிருப்பவரும் (மா - செல்வம்) கடியார் மாவார் - (ஆகிய அவர் யாரெனில்) மணம் நிறைந்த மாமரத்தை இடமாக உடையாராகிய ஏகாம்பரநாதர் ஆவர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:17:19(இந்திய நேரம்)