தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-கண்டவளை - 16




நேரிசை வெண்பா

கண்டவளை மேவிக் கலந்துண்ட கள்வனொலி
கொண்டவளை நீர்க்கச்சிக் கோமானே! - பண்டுனது
தாளை மருவுந் தகைமையிலான் உற்றதெவன்
தோளை மருவுஞ் சுகம்.                              (16)

(இ-ள்) கண்ட அளை மேவி - (ஆயர்ச் சேரியில்) கண்ட வெண்ணெயைப்பொருந்தி, கலந்துண்ட-சேர்ந்து உண்ட, கள்வன்-திருமாலினது, ஒலிகொண்ட - முழக்கத்தைக் கொண்ட, வளை - சங்குகளை யுடைய, நீர்க்கச்சி - கம்பாநதி சூழப்பெற்ற காஞ்சியில் எழுந்தருளிய, கோமானே - தலைவனே (ஏகாம்பரநாதனே), பண்டு - முற்காலத்தில், உனது தாளை மருவும் தகைமையிலான் - உன் திருவடியைத் தேடிக் கண்டு அடைய முடியாத நிலைமையை யுடையவன் (பின்) தோளை மருவும் சுகம் - உன் தோளைத் தழுவும் இன்புறலை, உற்றது எவன் - அடைந்தது எப்படி?

கோமானே - கள்வன் பண்டு உனது தாளை மருவும் தகைமையிலான் பின் சத்தி வடிவமாக நின்பா லமர்ந்து உன் தோளைத் தழுவும் சுகம் உற்றது எந்த விதத்தால் (எ-று.)

கண்டவளை - கண்ட கண்ட மாதரை, (ஆயர்குலமகளிரை) மேவிக் கலந்து - சேர்ந்து கலந்து, உண் கள்வன் - வெண்ணெயை உண்ட
திருடன் (இது கிருட்டினாவதாரத்தில்). பண் டுனது தாளை மருவுந்தகைமையிலான் என்றது “திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை” என்ற கதையை உட்கொண்டு என்க.

எவன் - அஃறிணை வினாவினைக் குறிப்புமுற்று. “எவனென் வினாவினைக் குறிப்பு இழி இரு பால்” (நன்னூல்)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:17:45(இந்திய நேரம்)