தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-சிறுகாலின் - 21




மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

சிறுகாலின் மணமளவுந் திருக்காஞ்சி யுள்ளீர்
      சேயிழையாட் ககலுமிடைத் திருக்காஞ்சி யுள்ளீர்
மறியோடு மழுவிடமார் மாசுணந்துன் புடையீர்
      மங்கையணிந் திடுமுத்தம் மாசுணந்துன் புடையீர்
வெறிதாசை கூடன் மணத் துறவாலங் காட்டீர்
      விதிவிழைவு கண்டவிடத் துறவாலங் காட்டீர்
அறிவேனுஞ் செயலிட்டீர் அம்பரங்கா வணமே
      அளிப்பீரங் கொன்றைமல ரம்பரங்கா வணமே.             (21)

(இ-ள்) சிறுகாலின் - தென்றற்காற்றின், மணம் அளவும் - வாசனை வீசும், திருக்காஞ்சி யுள்ளீர் - அழகிய காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கின்றவரே, சேயிழையாட்கு - செம்மையான அணிகலன் உடையாளாகிய தலைவியின், இடை அகலும் - இடையினின்று நீங்கு தலையுடைய, திருக்காஞ்சி
- அழகினையுடைய ஏழு கோவையுடைய, காஞ்சி என்னும் அணிகலனை, உள்ளீர் - நினைக்கமாட்டீர் (கழலுதலைக் கவனிக்கமாட்டீர் என்பது கருத்து).

மறியோடு - மானோடு, மழு - மழுப்படையும், விடம் ஆர் - நஞ்சு பொருந்திய, மாசுணம் - பாம்பும், (ஆகிய இவைகள்) துன் - நெருங்கிய, புடையீர் - பக்கத்தை உடையவரே.

மங்கை - இப்பெண், அணிந்திடு முத்தம் - பூண்டிருக்கும் முத்து மாலையும், மாசு உண் துன்பு - குற்றம் அடைதற்குக் காரணமான துன்பத்தை, உடையீர் - (போக்கீர்) உடைக்க மாட்டீர்.

முத்து - முத்துமாலையும், மாசுண்ணம் - சிறந்த கலவைச் சாந்தும் உண்டாக்குகின்ற, துன்பு - துன்பத்தை, உடையீர் - போக்க மாட்டீர், (துன்பமாவது - காமவெப்பத்தால் அணிந்த முத்து மாலை கரிதலினாலும் பூசிய சாந்து பொரிப் பொரியாகப் போதலினாலும் உண்டாதல்) எனினுமாம், வெறிது ஆசை - வீணான ஆசையால், கூடல் - கூடுதலை மேற்கொண்டு, மணத்துற - மணம் செய்துகொள்ள, ஆலங்காட்டீர் - திருவாலங்காட்டில் எழுந்தருளியுள்ளவரே (ஆலங்காட்டிற்கு அடுத்த ஊர் மணவூர்); மணம் நிறைந்த ஊர் மணவூர்.

விதி விழைவு - விதியின் முறைமையால், கண்டவிடத்து - மணம் புரிதல் காலத்து, உறவு ஆல் - உறவினாலே, அம்காட்டீர் - அழகினைக் (தலைவிக்கு) காட்ட மாட்டீர், தலைவியைக் கண்ட விடத்து உறவோடு, விதிவிழை - திருமண விழைவு, ஆட்டீர் - செய்யீர்.

1.     அறிவேன் - அறிவை உடைய என்னிடத்து, அம்பரம் - ஆடையை, காவண்ணம் - தடுக்கும் வண்ணம் (போக்கும் வண்ணம்), செயல் இட்டீர் - நும் செய்கையைச் செய்தவரே.

2.    அம்பரம் காவணம்:- காவணம் - மானத்தைக் காத்தற்கு உரிய அம்பரம் - ஆடை.

3.    நும் செயல் இட்டீர் - நிர்வாணமாயிருக்கும் நும் செயலை இட்டீர் - என்னையும் நிர்வாணம் ஆக்கினீர் - இந்த உண்மையை அறிவேன், அம்பரம் - ஆடையை, காவண்ணம் - காத்தல் செய்தவண்ணம் அறிவேன், நும் செயலைச் செய்தீர் - நும் செயலைச் செய்தீர், நும் செயலாவது நிர்வாண கோலத்தோடு இருத்தல், அம்பு அரங்காவண்ணம் - மன்மதன் அம்பு (மனத்தை) கலக்காதபடி, அம்கொன்றை மலர் - அழகிய கொன்றை மலராகிய மாலையை, அளிப்பீர் - கொடுப்பீர்.  சேயிழையாட்கு - சேயிழையாளின் (உருபு மயக்கம்)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:18:31(இந்திய நேரம்)