தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-பனிக்கால - 38




இளவேனில்

எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

      பனிக்கால மேகப்ப லம்பூவி றைக்கும்
            பருவத்த ருட்கச்சி இறையிங்கு வாரான்
      குனிக்கோல நம்பன்ற ணிப்பென்ன சொல்வான்
            குன்றத்தி ருத்தானை மன்றத்து வைத்தே
      தனிப்பாக என்னைப்ப சப்பிக்க லந்த
            சமயத்து ரைச்சத்தி யங்கூறி யரவை
      இனிப்பாரு மொழியாளன் இதுசெய்தல் அழகோ
            என்றேயு டன்கேட்பன் இனியென்ன குணமே.          (38)

(இ-ள்.) பனிக் காலம் ஏக - பனிக்காலம் ஒழியவந்த, பல் அம் பூ இறைக்கும் - பலவாகிய அழகிய மலர்களைச் சொரியும், பருவத்து - இளவேனிற் காலத்து, அருட் கச்சி இறை - கருணையையுடைய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், இங்கு வாரான் - இவ்விடத்து வாராராயினார், (இனி வருவாராயின்) குனிக் கோல நம்பன் - (அன்பர் என்பும் உருக) நடிக்கும் அழகிய நம் பரமன் (சிவன்), தணிப்ப - (என்) ஊடலைத் தணிப்பதற்கு, என்ன சொல்வான் - என்ன காரணம் சொல்வார்? குன்றத்து இருந்தானை - கச்சியை விடுத்துப் போய்க் கயிலைக் குன்றில் ஒளித்து நின்ற அவரை, மன்றத்து வைத்து - யாவரும் காணும் சபையில் கொண்டுவந்து இருக்கச் செய்து, தனிப்பாக - யாவருங் காணாதபடி தனிமையாக, என்னைப் பசப்பி - எனக்குப் பசப்பான வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றி, கலந்த சமயத்து - கூடிய காலத்தில், சத்தியம் உரை கூறி - (தெய்வங்காட்டி) ‘நின்னைப் பிரியேன்; பிரிந்தால் உயிர் தரியேன்’ என்று உண்மை மொழிகளைக் கூறி, அரவை இனிப்பு ஆரும் மொழியாளன் - ஆரவாரத்தோடு கூடிய இனிமை நிறைந்துள்ள சொற்களையுடையவரே, இது செய்தல் அழகோ - நீர் பிரிவு நீட்டித்து வாராமையாகிய இதனைச் செய்தல் அழகாகுமோ, என்றே - என்று, உடன் கேட்பன் - உடனே கேட்பேன், இனி என்ன குணம் - பொறுத்துக்கொண்டிருத்தல் முதலிய குணங்களால் இனி என்ன பயன்?

மன்றம் - யாவரும் காணும் பொதுவிடம்.

மன்றம் - சபை; ஐந்து அம்பலங்கள்.

(1) திருவாலங்காடு,
      (2) தில்லை,
      (3) மதுரை,
      (4) திருநெல்வேலி,
      (5) திருக்குற்றாலம்

என்பன ஐந்து பொது இடங்கள்.

தனிமையாக என்பது, களவைக் குறித்தது.  பசப்பி என்பதற்கு மகளிர்க்குத் தலைவரைப் பிரிதல் ஆற்றாமையால் தோன்றும் நிறவேறுபாடு எனினுமாம்.

தலைவி தோழிக்குப் பிரிவாற்றாமையால் தோன்றிய ஊடலால் கூறிய கூற்றாக அமைந்துள்ளது இச் செய்யுள்.

குன்றத்திலே இருக்கின்ற அவனை நியாய சபையிலே இழுத்து வைத்துத் தனியாக என்னைக் கூடிய காலத்தில் இனிய மொழிகளையும் உண்மை உரையையும் கூறியவன் இப்படி நான் வருந்தும்படி விட்டிருத்தல் அழகாமோ என்று உடனே கேட்பேன்.  நமக்குப் பொறுத்துக்கொண்டிருத்தலால் இனி என்ன பயன் உண்டாம்.  ஒரு பயனும் உண்டாகாது என்பதாம்.

என்ன குணம் என்பதற்கு, அவன் பித்தனாதலால், மன்றத்தில் வைத்துக் கேள்வி கேட்டாலும் தக்க பதில் சொல்லிக் கட்டுப்படான்.  ஆதலால், என்ன பயன் உண்டாம் எனினுமாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2019 16:27:26(இந்திய நேரம்)