Primary tabs
இடைச்சியார்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
பண்டுமலை
கொண்டுபயோ தரத்திகலை வென்றிடுமைம்
படையா னுக்கு
மண்டுபயோ
தரகிரியைக் காணிக்கை இட்டீரால்
வள்ளல் கச்சிக்
கண்டயங்கும்
இடைச்சியீர்! ஆடைநீக் காதுருசி
காண்பின் என்பீர்
கொண்டவளை
உருக்காமே கொளஇணங்கீர் ததியெண்ணீர்
நயமோர் விற்றே. (51)
(இ-ள்.) பண்டு - முற்காலத்து, மலை கொண்டு - மந்தர மலையைக்கொண்டு, பயோதரத்து - பாலைக்கொண்டதாகிய கடலின், இகலை வென்றிடும் - வலிமையை வெற்றிகொள்ளும், ஐம்படையானுக்கு - ஐந்து போர்க்கருவிகளையுடைய திருமாலுக்கு (கண்ணனுக்கு), மண்டு - நெருங்கிய, பயோதர கிரியை - பாலைக் கொண்ட முலையாகிய மலையை, காணிக்கை இட்டீர் - காணிக்கையாகக் கொடுத்தீர், வள்ளல் கச்சிக்கண் - வரையாது கொடுக்கும் வள்ளலாகிய ஏகாம்பரநாதர் எழுந்தருளிய காஞ்சியினிடத்து, தயங்கும் இடைச்சியீர் - விளங்குகின்ற இடைச்சியாரே, ஆடை நீக்காது - பால் முதலியவற்றின்மேல் உண்டாகும் ஏட்டினை எடுத்து விடாமல், ருசி காண்மின் என்பீர் - பாலின் முழுத்த சுவையைத் துய்த்துப் பாருங்கள் என்பீர், கொண்ட அளை - கொண்ட வெண்ணெயை, உருக்காமே கொள - உருக்காமலே நாங்கள் கொள்ள, இணங்கீர் - சம்மதிப்பீர், நயம் மோர் விற்று - நயமான மோரை விற்று, ததி யெண்ணீர் - (மிக்க பொருள் தரும்) தயிரைக் கருதமாட்டீர் (நும் இயல்பு இருந்தவாறு என்னே!)
இட்டீர் - விரும்பிக்கொடுக்கும் பொருளாகக் கொடுத்தீர்; உங்கள் முலைநலம் கண்ணன் துய்க்க இடங்கொடுத்தீர்.
‘ஆடை நீக்காது உருசி காண்மின் என்பீர்’ என்பதற்குச் ‘சேலையை நீக்காமல் புணர்ச்சி இன்பச் சுவை பார்ப்பீர்’ என்பது போக்குரை.
கொண்ட வளை உரு காமே கொள இணங்கீர் - நிறையைக் கவர்ந்து கொள்ள, அதனால் வளையல்களின் (கழன்றிருக்கும்) உருவத்தால் கா(ம)மே மேலிட, (புணர்வதற்கு) இணங்க மாட்டீர்.
சிறிது இச்சையை ஊட்டி முற்றிலும் அதனை நிறைவேற்ற மாட்டீர்.
நயம் மோர் விற்று ததி எண்ணீர் - நயமாக மோரை விற்றுத் தயிரை விற்க எண்ணாமல் இருக்கின்றீர்.
ததி எண்ணீர் - சமயம் கருதமாட்டீர்.
உங்கள் நயம் ஓர் விற்று - உங்கள் நயப்புத்தன்மை ஆராயத் தக்கது.
கொண்ட அளை உருக்காமே கொள இணங்கீர் - கொண்ட அளை (வெண்ணெயை) உருக்காமல் நாங்கள் வாங்கிக்கொள்ள இணங்கமாட்டீர்,
ஐம்படை - சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்பன,
பயோதரம் - பாற்கடல், முலை.
பயோதர கிரி - பாற்கடலில் கிடத்திய மந்தரமலை; முலையாகிய மலை.
ஆடை - பாலேடு; துகில்; புடைவை. வளை - வளையல்.