தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-ஆடவரும் - 54




வெறி விலக்கு

அறுசீர் ஆசிரிய விருத்தம்

      ஆடவரும் பெண்மைவிரும் பபிராமர்க் கணங்குற்ற
            அறிவி லேனைச்
      சாடவருஞ் சிறுகாலுந் தழன்மதியுஞ் சாகரத்தின்
            ஒலியு நெஞ்சம்
      வாடவரு மலர்க்கணையும் மறிவீய இரிந்திடுமோ!
            வனசத் தானுந்
      தேடவரும் ஏகம்பர் தாமத்தைக் கொணர்வீரேல்
            தேறு வேனே.          (54)


(இ-ள்.) ஆடவரும் - ஆண் மக்களும், பெண்மை விரும்பு - பெண்ணாய் இருக்கும் தன்மையை விரும்பும், அபிராமர்க்கு - அழகுடைய ஏகாம்பரநாதரிடத்து, அணங்குற்ற அறிவிலேனை - ஆசையுற்றுத் துன்பமடைந்த அறிவில்லேனாகிய என்னை, சாடவரும் - கொல்ல வரும், சிறு காலும் - தென்றற்காற்றும், தழன் மதியும் - நெருப்பின் வடிவமான நிறை மதியமும், சாகரத்தின் ஒலியும் - கடலின் (ஓயாத) ஓசையும், நெஞ்சம் வாட வரும் - மனம் வாடுமாறு வருகின்ற, மலர் கணையும் - (மதன் எய்யும்) மலராகிய அம்புகளும், (ஆகிய இவை) மறி வீய - ஆட்டுக்கடாவைப் பலிகொடுத்து அதனை இறக்கச் செய்தலால், இரிந்திடுமோ - நீங்கி விடுமோ (நீங்கா), வனசத்தானும் - (திருமாலன்றிப்) பிரமனும், தேட அரு - தேடுதற்கரிய, ஏகம்பர் தாமத்தை - ஏகம்பநாதரது தோளில் உள்ள கொன்றை மாலையை, கொணர் வீரேல் - கொண்டு வருவீராயின், தேறுவேன் - இவையெல்லாம் கெட்டோடும்; (யான்) தெளிவடைவேன்.

ஆட்டுக் கிடாயைப் பலி கொடுத்தலால், இவையெல்லாம் (தென்றல், தழல் மதி, கடல் ஓசை, மலர்க்கணை) நீங்கி விடுமோ? நீங்கா.  இவை நீங்குதற்கு உரிய பொருள் ஏகம்பர் கொன்றை மாலை (தாமம்). ஆண் மக்களும் ஏகம்பர் என்னும் தலைவரைக் கண்ட காலத்து, அவரது பேரழகைக் கண்டு அதில் ஈடுபட்டு அதனைக் துய்ப்பதற்குப் பெண்மைத் தன்மை அடைந்தால் நல முறலாம் என்று பாராட்டும்படியான சிறப்புவாய்ந்த அழகுடையார் தலைவர் என்க.  அத்தகையார்மீது ஆசை கொண்டேன். நமக்குக் கிட்டாதது என்று உணராமையால் ‘அறிவிலேன்’ என்றாள்.  ‘ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினான்’ கம்பராமாயணம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:23:39(இந்திய நேரம்)