தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-அனைத்திடமு - 58



கலி விருத்தம்

அனைத்திடமும் ஒளிமருவ அமைந்ததொரு விழியே
மனத்துயரை மாய்க்கவருண் மலர்ந்ததொரு விழியே
சினத்துலகைச் சிதைக்கவழல் சிறந்ததொரு விழியே
நினைத்துலகந் தொழுகச்சி நின் மலர்மூ விழியே.              (58)

(இ-ள்.) உலகம் நினைத்துத் தொழும் - உலகினர் தன்னை நினைத்து வணங்குகின்ற, கச்சி நின்மலர் - காஞ்சியில் எழுந்தருளிய மறுவிலாத் தெருளினரான ஏகாம்பரநாதருடைய, மூ விழியே - கண்கள் மூன்றே, (அவற்றுள்) அனைத்திடமும் - எல்லா இடங்களும், ஒளி மருவ - ஒளி பொருந்தும்படி, அமைந்தது - பொருந்தியது, ஒரு விழியே - வலப்பக்கத்து அமைந்த விழியாகிய ஞாயிறே, மனத்துயரை - மனத்துன்பத்தை, மாய்க்க - ஒழிக்க, அருள் மலர்ந்தது - கருணை செய்தது, ஒரு விழியே - இடப்பக்கத்து அமைந்த விழியாகிய திங்களே, சினத்து - வெகுண்டு, உலகைச் சிதைக்க - உலகத்தை அழிக்க, அழல் சிறந்தது - அனலைச் (சொரிந்து) சிறந்தது, ஒரு விழியே - நெற்றி விழியாகிய நெருப்பே.

மூ விழியே என்றதை, விழி மூன்றே எனப் பிரித்துக் கூட்டுக. ஈண்டு ஏகாரம் தேற்றம்.

ஏனைய ஏகாரங்கள் பிரிநிலையோடு தேற்றமாம்.  சினந்து என்பது சினத்து என வலித்தல் விகாரம் பெற்றது.  ஆக்கல் அருளல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் உடையவர் ஏகாம்பரநாதர் என்று விளக்கியவாறு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:24:15(இந்திய நேரம்)