Primary tabs
எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்
சடைகரந்த அரவமிந்து பகைமைமாறு தகைமையார்,
தரமறிந்து கருணைநல்கு தனையிறந்த மகிமையார்
மடைதிறந்த கடலையொத்த மருளகற்றும் அருளினார்
மகிழ்சிறந்த முதல்வர் தங்க மலைகுழைத்தென்? விறல்மதன்
படைதுரந்து நெஞ்சிருப்பு வஞ்சரேன் குழைத்திலர்?
பகரொணாத பண்பமர்ந்த பரமரின்னும் அருகுறா
திடைமறந்த தென்கொலோ? வென் இளமைநன் னலம் பெறற்
கெனையணைந்த கச்சிமேவும் இணையிகந்த போதரே. (60)
(இ-ள்.) சடை கரந்த - சடையில் மறைந்த, அரவம் - பாம்பு, இந்து பகைமை - அந்தச் சடையிலே உள்ள பிறையைப் பகைத்தலை, மாறு தகைமையர் - மாற்றும் தன்மையையுடையார், தர மறிந்து - (உயிர்களின்) உயர்வு தாழ்வு அறிந்து, கருணை நல்கு - கருணை செய்தலில், தனை இறந்த மகிமையார் - தம்மை மறந்த பெருமையை உடையவர், மடை திறந்த - மடையைத் திறந்த, கடலை யொத்த - கடலை ஒத்த, மரு ளகற்றும் - மயக்கத்தை ஒழிக்கும் அருளினார் - கருணையுடையவர், மகிழ் சிறந்த முதல்வர் - மகிழ்ச்சி மிக்க முதன்மை உடையவர், தங்க மலை - மேரு மலையை, குழைத்தென் - வில்லாக வளைத்து, அதனைக் குழைவித்தலால் எனக் கென்ன பயன்? ஒன்றுமில்லை, விறல் மதன் - வெற்றியையுடைய மன்மதன், படை துரந்து - அம்புகளை எய்து, நெஞ்சிருப்பு - நெஞ்சில் வந்து தங்கியிருத்தலை, ஏன் குழைத்திலர் - ஏன் போக்கிலர் (நெஞ்சிருப்பைப் போக்கினால் எனக்குப் பயன் பெரிதும் செய்தவராவர்) (ஆகவே), வஞ்சர் - வஞ்சகராவர், பகரொணாத சொல்லொண்ணாத, பண்பமர்ந்த - நற்குண நற்செய்கைகள் வாய்ந்த, பரமர் - நலம்புரி வீடு நல்கும் அருளினர், என் இளமை நன்னலம் - என் இளமைப் பருவத்தின் நன்னலத்தை, பெறற்கு - அடைதற்கு, எனை அணைந்த - எனைச் சேர்ந்த, கச்சி மேவும் - காஞ்சியில் எழுந் தருளிய, இணை யிகந்த - ஒப்பில்லாத, போதர் ஞானச் சொரூபர், இன்னும் அருகுறாது - இன்னமும் என் அருகில் வாராமல், இடை மறந்தது - (முதலில் அன்பு காட்டி) இடையே என்னை மறந்தது, என் - என்ன காரணம்?
தகைமையாரும், மகிமையாரும், அருளினாரும், முதல்வருமாகிய என் இளமை ... ... போதர் தங்க மலை குழைத்து என் நெஞ்சிருப்பு ஏன் குழைத்திலர்? இடை மறந்தது என்? ஆதலின், அவர் வஞ்சர் என முடிக்க.
கொல், ஓ - அசைநிலைகள். ‘கற்றதனாலாய பயனென் கொல்’ என்றவிடத்துக் கொல் அசைநிலை யெனப் பரிமேலழகர் குறித்திருத்தல் காண்க. ‘என்’ என்பதே வினாவைக் குறிக்குஞ் சொல். ‘ஓ’ என்பன பொருளிலவாய் நின்றனவாதலின் அவை அசைகள். கருணை நல்கு மகிமையார், தனை இறந்த மகிமையார்.
தனை - தன்னை (ஒருமை), இறந்த மகிமையார் (பன்மை); ஒருமை பன்மை மயக்கம். தனை, அளவு எனலுமாம். (எத்தனை - எவ்வளவு).
தர மறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார் - உயிர்களின் உயர்வு தாழ்வு அறிந்து கருணை நல்குதலில் மிகுதி குறைவு காட்டுதல் இல்லாதுத் தம்மை மறந்து யாவர்க்கும் ஒரே பெற்றியாக, பரிசாக, தன்மையாக, நிலையாக அருள் செய்யும் பெருமை யுடையவர். அவ்விதப் பெருமையுடையவராயிருந்தும் மலையைக் குழைக்கும் வன்மை பெற்றும் மன்மதன் என் நெஞ்சிலிருந்து துன்பத்தைச் செய்தலைப் போக்கவில்லையாதலால், ‘வஞ்சரே’ என்னப் பெற்றார்.
மடை - நீர் பாயு மடை.
ஒத்த என்னும் பெயரெச்சம் அருளினார் என்பதனோடு இயையும்.
தங்க மலை - பொன் மலை, (மேரு மலை).
விறல் மதன் நெஞ்சிருப்பு - வெற்றி மதன் என் நெஞ்சில் இருத்தலை.
‘விறல் மதன் நெஞ்சிருப்பு’ என்பதற்கு, விறல் மதனுடைய இரும்புபோன்ற நெஞ்சினை ஏன் குழைத்திலர் என்ற பொருள் கூறினும் அமையும். பொன் மலையைக் குழைத்தவர் இரும்பு நெஞ்சினைக் குழைத் திலராதற்குக் காரணம் என்னையோ?
ஏன் குழைத்திலர் - ஏன் போக்கிலர் என்க.
ஒணாத - ஒன்றாத என்பதன் மரூஉ.
பரமர் போதர் - மேன்மையான வாலறிவாம் முற்றுணர்வு பெற்ற முதல்வர் என இயைக்க.