தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-அண்ணியரா - 62



நேரிசை வெண்பா

அண்ணியரா னார் அறவோர்க் கத்தர் அலரிதழிக்
கண்ணியர்பூங் கச்சிநகர்க் கத்தரடி - மண்ணியமுத்
தந்தம்பற் பந்தாந் தனந்தந் தனவிடையார்
தொந்தங்கொள் என்றன் துணை.                            (62)

(இ-ள்.) அத்தர் - தலைவரும், அறவோர்க்கு - அறநெறியில் நிற்கும் முனிவோர்க்கு, அண்ணியரானார் - அவரை நெருங்கி அருள் செய்பவர் ஆனாரும், அலர் இதழ்க் கண்ணியர் - மலர்ந்த கொன்றை இதழ்களால் ஆகிய தலை மாலையை உடையாரும், பூங்கச்சி நகர் கத்தர் அடி - அழகிய கச்சிப்பதியில் எழுந்தருளிய கர்த்தரும் ஆய சிவபெருமானார் திருவடி, மண்ணிய - கழுவப் பெற்ற, முத்தம் தம் பல் - முத்துக்கள் தங்களுடைய பற்கள், பந்து ஆம் தனம் - பந்தை ஒத்த முலை, தந்து அன்ன இடையார் - தாமரை நூலை ஒத்த இடை ஆகிய இவற்றை உடைய பெண்களது, தொந்தங் கொள் என்றன் - தொடர்புகொண்டு அழியும் என்றனுடைய, துணை - சம்பந்தத்தைப் போக்கிக் காக்கும் சிறந்த துணையாம், இனி மண்ணிய - செப்பமிடப்பெற்ற, முத்தம் - மோட்சமும், தம் பற்பம் தாம் - தாம் அருளும் திருநீறும். தனம் - அருட் செல்வமும், தந்தனம் - எவருக்கும் பட்டுப்பட்டு இயங்காது வெறுத்து ஒதுக்கிடுமாறு யாண்டும் செல்லவல்ல, விடையார் - இடப ஊர்தியையும் உடைய சிவபெருமானிடத்து, தொந்தங் கொள் - தொடர்புகொண்ட, என் துணை - எனக்கு உரிய துணையாகும்.

அடி என்றன் துணை எனக் கூட்டுக.

கர்த்தர் என்பது கத்தர் என இடைக்குறையாய் நின்றது. வடமொழி திரிந்து நின்றதெனினும் ஆம்.

அடி, மகளிரிடத்துக்கொண்ட தொந்தம் போக்கும் துணையாம் என்க.

அடி இடையார் கொள் தொந்தம் துணை என இயைத்துத் தொந்தம் துணை என்பதற்குப் பிணிக்கு மருந்து என்புழிப் போலப் பொருள் கூறுக.

இனித் திருவடிகள், முத்தமும், பற்பமும், தனமும் தந்தன.  ஆகவே, அந்த அடிகள் விடையாரிடத்துத் தொந்தங்கொள் என்றன் துணையாகும் என்றுமாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2019 14:54:44(இந்திய நேரம்)