Primary tabs
தரவுகொச்சகக் கலிப்பா
கணக்கோலங் கொங்கைக் கிடவந்தீர்! கட்செவிமால்
குணக்கோலன் கச்சிக் குழகன் றிருவுலா
வணக்கோலங் காண வருவீர் மனமகிழ்ந்தே. (83)
(இ - ள்.) மணக்கோல் அஞ்சு எய்ய-வாசனை பொருந்திய மலரம்புகள் ஐந்தை (உம்மை) எய்யும்படி, மதனன் முடுகி நின்றான் - மன்மதன் விரைந்து நின்றான், கணம் கோலம் - கூட்டமாகிய பலவகைப்பட்ட கோலங்களை, கொங்கைக்கு - முலைக்கு, இட வந்தீர் - இட வந்தவரே (தோழியரே), கட்செவிமால் - பாம்பின்மீது பள்ளிகொள்ளுந் திருமாலாகிய, குணக்கோலன் - மேன்மைக்குணம் பொருந்திய அம்பினை உடையவனாய, கச்சிக் குழகன் - கச்சிப்பதியிலுள்ள அழகனது, திருவுலா-அழகிய திருவுலாவினது, வணம் கோலம் - சிறந்த அழகினை, மன மகிழ்ந்து - மனமகிழ்ச்சி அடைந்து, காண வருவீர் - காணும்படி வருவீர்.
மன்மதன் மணக்கோலஞ் செய்கிறான்; குழகன் ஊர்க்கோலம் வருகிறான்; நீர் கலியாண வீட்டில் மணப்பெண்ணை அலங்கரிக்க வந்தீர்போலும். இது போக்குரை.
இது தலைவி கூற்று.
ஐந்து பாணங்களாவன - மன்மதன் கரும்பு வில்லிற் றொடுத்துக் காமுகரை யெய்யும் ஐந்து மலர்க் கணைகள்.
அவை: தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோற்பலம். அவை முறையே, சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரண மெனும் அவத்தைகளைச் செய்யும். இதனை, “வனசஞ் சூத மசோகு முல்லை, நீலமென மதன் பெய்கணையைந்தே”. “சுப்பிர யோகம் விப்பிர யோகம், சோகம் மோகம் மரணமுந் தோற்றும், அவைதாம், சுப்பிர யோகஞ் சொல்லு நினைவும், விப்பிர யோகம் வெய்துயிர்த் திரங்கல், சோகம் வெதுப்புந் துய்ப்பன தெவிட்டலும், மோக மழுங்கலும் மொழி பல பிதற்றலும், மரண மயர்ப்பும் மயக்கமுஞ் செய்யும்” என வருவதனா லறிக. அப் பாணங்களை “நெஞ்சி லரவிந்த நீள்சூதங் கொங்கையினில், துஞ்சும் விழியி லசோகமாம் - வஞ்சியர்தஞ், சென்னியிலே முல்லை திகழ்நீல மல்குலிலே, யென்னவே ளெய்யுமியல் பாம்” இம் முறையாக வெய்வனென நூல்கள் கூறும்.
கணக்கோலம் கொங்கைக் கிடுதலாவது - அணிகலம் அணிதல், தொய்யில் எழுதுதல் முதலியன.
கோல் - அம்பு.
அஞ்சு - ஐந்து என்பதன் மரூஉ.
கட் செவி - கண்ணினிடத்தே நெருங்கியிருக்கும் செவியையுடையது எனப் பாம்பிற்குக் காரணக்குறி. கண்ணையே செவியாக உடையது என்பர் பழம் புலவர்.
வணக் கோலம், வண்ணம் கோலம் - ஒருபொருட் பன்மொழி; சிறந்த கோலம் என்பது பொருள்.
குழகன் - இளமை அழகுடையோன்.