தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-தாளமிரண் - 90



 

குறம்

எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்

தாளமிரண் டென்னுமுலைத் திருவனையாய்! தளரேல்
      தரணிபுகழ் கச்சிநகர்த் தலைவனைநீ புணரும்
வேளையறிந் துரைத்திடுவன் விரைந்தொர்படி நெல்லும்
      வேறுந்தலைக்கெண் ணெயும்பழைய கந்தையையுங்
காளவுருக் காமவிழிக் கன்னிதனக் கந்நாட்
      கருதியொரு குணங்குறியும் அரியவர்க்கோர் குணமுங்கொடுவா
கோளகலக் குறியிரண்டுங் கொடுப்பையென மொழிந்தோள்
      குடியுதித்த குறமகள்யான் குறிக்கொளென்றன் மொழியே.        (90)

(இ - ள்.)  தாளம் இரண் டென்னும்-கைத் தாளம் இரண்டென்று சொல்லப்படும், முலைத் திருவனையாய் - தனத்தை உடைய திருமகளைப்போன்ற தலைவியே!, தளரேல் - நீ மனத் தளர்ச்சி அடையாதே, தரணி புகழ் - உலகத்தார் புகழும், கச்சிநகர்த் தலைவனை - கச்சி நகரில் எழுந்தருளிய நாயகனை (ஏகாம்பரநாதனை), நீ புணரும் வேளை யறிந்து - நீ கூடும் சமயத்தைக் குறியால் அறிந்து, உரைத்திடுவன் - சொல்லிடுவேன், விரைந்து-சீக்கிரமாகச் சென்று, ஓர் படி நெல்லும் - அதற்கு ஒரு படி நெல்லையும், வெறுந் தலைக்கு - வெறுந் தலையில் தேய்த்துக் கொள்ளுதற்கு, எண்ணெயும்-எண்ணெயையும், பழைய கந்தையையும் - அரையில் கட்டிக்கொள்ளுதற்குப் பழைய கந்தைத் துணியையும், கொடு வா - கொண்டு வா, காள வுரு - கருமை வடிவத்தை உடைய, காம விழிக் கன்னி தனக்கு - காமக் கண்ணியாருக்கு (காமாட்சியாருக்கு), அ நாள் - அந்த நாளில், கருதி - எண்ணி, ஒரு குணங் குறியும் அரியவர்க்கு - தனக்கென ஒரு குணமும் (சுட்டி அறியப்படும்) அடையாளமும் கொண்டிராத அருமை உடையவர்க்கு, ஓர் குணமும் - ஒரு மேன்மையும், கோள் அகலக் குறி யிரண்டும் - குற்றம் நீங்க முலைத்தழும்பும் வளைத்தழும்புமாகிய குறியிரண்டும், கொடுப்பை - கொடுப்பாய், என மொழிந்தோள் - எனச் சொன்னவள், குடி யுதித்த - பிறந்த குடும்பத்தில் தோன்றிய, குறமகள் யான் - குறப்பெண் யான், என்றன் மொழி குறிக்கோள் - எனது வார்த்தையை எண்ணிக்கொள்.

‘அந்நாள்’ என்பது, காஞ்சியிலே கம்பாநதிதீரத்தில் அம்பிகை பூசித்த நாள்.

‘ஓர் குணம்’ என்பது, தனக்கென விருப்பமில்லாராய் இருந்தும் காமக்கண்ணியார் தன்னைத் தழுவுவதற்கு இசைந்ததாகிய ஒப்பற்ற குணமாம்.

மொழிந்தோள் குடியுதித்த குறமகள் யான் - காமாட்சி அம்மையாருக்குக் குறி சொன்னவளது குடியிற் பிறந்த குறத்தி நான்.

தரணி - இடவாகுபெயர்.

“துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
      துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
 பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு
      பொங்கொளி தங்குமார் பினனே”

என்பது திருவாசகம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:29:08(இந்திய நேரம்)