Primary tabs
இரங்கல்
பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்
குருகு நெகிழுந் திறநவில்வாய்
கழிசேர் குருகே குருகழியக்
கொங்கை திதலை பூப்ப வுளங்
குலைந்தே யுடைய வுடைசோரப்
பருகும் பாலு மருந்தனமும்
பகைக்கு மருந்தென் றறையனமே
பழுவ மனைய குழல்பூவைப்
பரியா மையைச்சொல் பூவையே
அருகு பயின்ற கிளையே யென்.
கிளையால் வந்த தத்தனையும்
அளந்த படியே அளந்தாலும்
அதுவே சாலும் அளியினமே
முருகு விரிபூம் பொழிற்கச்சி
மூவா முதல்வர் அளியினமு
முறையோ அளியேற் களியாமை
கேளீர் இதனைக் கேளீரே. (98)
(இ - ள்.) கழி சேர் குருகே - கழிக்கரையைச் சேர்ந்த நாரையே, (என் தலைவரிடத்தில்), குருகு நெகிழும் திறம் - (தலைவர் தம் பிரிவாற்றாமையால்) என் கை வளையல் கழன்று கீழே விழும் திறத்தை, நவில்வாய் - சொல்லுவாய், அனமே - அன்னமே, குரு கழிய - தலைவர்தம் (பிரிவாற்றாமையால்) என் மேனியின் நிறம் நீங்கவும், கொங்கை திதலை பூப்ப - தனம் தேமல் பூப்பவும், உளம் குலைந்தே - மனம் நிலை கெட்டே, உடைய - சிதையவும், உடை சோர - உடை சோர்வடையவும், பருகும் பாலும் - குடிக்கும் பாலும், அருந்து அனமும் - உண்ணும் சோறும், எனக்கு பகைக்கும் மருந்து என்று - வெறுக்கத்தக்க கைப்புடைய மருந்து போலாயினவென்று, அறை - (என்தலைவரிடத்தில்) சொல்வாய், பழுவம் அனைய - காட்டை ஒத்த, குழல் - கூந்தலில், பூவை - மலரை, பரியாமையை - (தலைவர் பிரிவாற்றாமையால்) நான் துணியாமையை, பூவையே - நாகண வாய்ப்புள்ளே, சொல் - என் தலைவரிடத்தில் சொல்வாய், அருகு - என் அருகில், பயின்ற - இருந்து பழகிய, கிளையே - கிள்ளையே (கிளியே), என் கிளையால் - என் சுற்றத்தாரால், வந்தது அத்தனையும் - வந்த துன்பங்கள் எல்லாம் (அவ்வளவு துன்பமும்), அளந்த படியே - (மிகுத்துச் சொல்லாமல்) எனக்கு நிகழ்ந்த அளவின்படியே, அளந்தாலும்-எடுத்துச் சொன்னாலும், அதுவே சாலும் - அதுவே போதும், அளி இனமே - வண்டின் கூட்டமே, முருகு விரி - வாசனையை வெளிப்படுத்தி மலர்கின்ற, பூம் பொழில் - அழகிய பூக்களையுடைய சோலை சூழ்ந்த, கச்சி மூவா முதல்வர் - காஞ்சியில் எழுந்தருளிய மூப்புற்று அழிதலில்லாத கடவுள், அளி - தம் கருணையை, அளியேற்கு - இரங்கத் தக்க எனக்கு, இனமும் அளியாமை - இப்போதும் அருளிச்செய்யாமை, முறையோ - முறையாகுமோ என்பதை, கேளீர் - கேட்பீர், இதனைக் கேளீர் - இதனை மறவாது கேட்பீர்.
திதலை - தேமல். (பொன்னுரை கடுக்கும் திதலையர். திருமுருகா. 145.)
‘அன்னம், கிள்ளை’ என்பன ‘அனம், கிளை’ யென இடைக் குறையாயின.
அளியினமே - வண்டின் கூட்டமே. உங்களுக்கு அளி எனும் பெயர் வாய்ந்தமையால், நீங்களும் எனக்கு அளி செய்வீரென்பது திண்ணம். (அளி - கருணை.)
மூவா முதல்வர் - மூத்தலை இல்லாத முதல்வர்.
“கெழுவும் குருவும் நிறனா கும்மே” என்பது தொல். உரி ஆதலால், குரு கழிய என்பதற்கு, நிறன் அழிய என்ற பொருள் கூறப்பட்டது.
‘கேளீர்’ என இருமுறை கூறியது, மறந்து போகாமல் கேட்கவேண்டும் என எண்ணி என்க.