தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-கேளோ - 99




பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

கேளோ டுற்ற கிளையொ றுப்பீர்
      கேதம் உறுவீர் கெடுமதியாற்
   கிளிவாய் வரைவின் மகளிர்பாற்
      கிட்டி மயங்கித் தியங்குவீர்
வாளா கழிப்பீர் வாழ்நாளை
      வசையே பெறுவீர் வல்வினையீர்!
   வளமாந் தருவாய் உலகுய்ய
      வந்த கருணை ஆர்கலியைத்
தோளா மணியைப் பசும்பொன்னைத்
      தூண்டா விளக்கைத் தொழுவார் தந்
   துயரக் கடற்கோர் பெரும்புணையைத்
      துருவக் கிடையா நவநிதியை
வேளா டலைமுன் தீர்த்தானை
      வேழ வுரியைப் போர்த்தானை
   வெள்ளம் பாய்ந்த சடையானை
      வேண்டிப் புரிமின் தொண்டினையே.                (99)

(இ - ள்.)  கேளோடு - நண்பர்களோடு, உற்ற கிளை - பொருந்திய சுற்றத்தாரை, ஒறுப்பீர் - நும்முறை வறுமைத் துன்பத்தால் வெறுப்பீர், கேதம் உறுவீர் - துன்பம் அடைவீர், கெடு மதியால் - கெடு புத்தியால், கிளி வாய் - கிளிபோலும் இனிய சொற்களையுடைய, வரைவின் மகளிர்பால் - திருமணமில்லாத பொதுமகளிரிடத்து, கிட்டி - சேர்ந்து, மயங்கி-கலக்க முற்று, தியங்குவீர் - உள்ளம் சோர்வு கொள்ளுவீர், வாழ் நாளை-வாழ்கின்ற ஆயுள் நாளை, வாளா கழிப்பீர் - வீணாகக் கழிப்பீர், வல் வினையீர் - தீவினை உடையவர்களே, வசையே பெறுவீர் - பழியையே அடைவீர், வளமாந் தருவாய் - (காஞ்சிப்பதியில்) வளம் பொருந்திய மாமரத்தினிடத்து, உலகு உய்ய - உலகினர் பிழைக்கும்படி, வந்த - எழுந்தருளிய, கருணை ஆர்கலியை - கருணைக் கடலும், தோளா மணியை - துளை செய்யப்படாத முழு மணியும், பசும் பொன்னை - பசும் பொன்னும், தூண்டா விளக்கை - தூண்டப்படாத விளக்கும், தொழுவார் தம் - தம்மை வணங்குவாரது, துயரக் கடற்கு - துக்கமாகிய கடலைக் கடத்தற்கு, ஓர் பெரும் புணையை - ஒப்பற்ற பெரிய தெப்பமும், துருவக் கிடையா - தேடக் கிடையாத, நவநிதி - நவநிதியும், வேள் ஆடலை - மன்மதன் வலியை, முன் தீர்த்தானை - முன் தீர்த்தானும், வேழ வுரியை - யானைத் தோலை, போர்த்தானை - போர்த்தவனும், வெள்ளம் பாய்ந்த - கங்கை பாய்ந்து தங்கிய, சடையானை - சடையை உடையவனும் ஆய ஏகாம்பரநாதனை, வேண்டி - விரும்பி, தொண்டினை - அவனுக்குச் செய்யவேண்டும் தொண்டுகளை, புரிமின் - விரும்பிச் செய்யுங்கள்.

மயங்கி - நிலையழிந்து எனினுமாம்.  கெடுமதியால் தியங்குவீர் என இயையும்.  ‘சிந்தை கலங்கித் தியங்குகின்ற நாயேனை’ என்பது வள்ளலார் அருள் வாக்கு.     

நவநிதி:
பதுமம்,
மகாபதுமம்,
சங்கம்,
 
 
மகரம்,
கச்சபம்,
முகுந்தம்,
 
 
நந்தம்,
நீலம்,
கர்வம்
 

என்னும் குபேரநிதி ஒன்பது.

ஆடல் - வெற்றியுமாம்.

கேள் - இன்ப துன்பங்களைக் கேட்பவர் என்னும் பொருளில் நண்பர்களை உணர்த்திநின்றது.

கிளை - மரக்கிளைபோல் சேர்ந்து தழுவி நிற்பவர் என்னும் பொருளில் சுற்றத்தாரை உணர்த்திநின்றது.

கிளி வாய் என்பதற்குக் கிளியின் சிவந்த அலகு போலும் சிவந்த வாயிதழ்களையுடைய என்றும் பொருள் கொள்ளலாம்.

வரைவில் மகளிர் என்பதற்கு, இன்னாரைக் கூடவேண்டும், இன்னாரைக் கூடலாகாது என்னும் வரைவு (கொள்ளுவது தள்ளுவது என்ற உணர்வு) இல்லாத மகளிர் என்றும் பொருள் கூறலாம்.

‘வாளா’ என்பது ‘வாளாது’ என்பதன் விகாரம்.

ஆர்கலி - நிறைந்த ஒலியை யுடையது என்னும் பொருளில் வினைத்தொகை யன்மொழியாய்க் கடலை உணர்த்திநின்றது.  ஈண்டு, ஏகாம்பரநாதனார், கடலாக உருவகம் செய்யப்பெற்றுள்ள நயம் பாராட்டத்தக்கது.

“அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால், பிறவாழி நீந்த லரிது” ஆதலின், ‘துயரக் கடற்கோர் பெரும் புணை’ என்றார்.

துயரக் கடல் - பிறப் பிறப் பென்னும் துன்பமாகிய கடல்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:30:29(இந்திய நேரம்)