Primary tabs
கொங்கு நாட்டில் 
 சமய, சமுதாய, கல்வித் தொண்டில் ஈடுபட்டுவரும் 
 புகழ்பெற்ற நிறுவனம் திருப்பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம் 
 ஆகும். பல்லாண்டுகளாக இத்திருமடம் ஆற்றிவரும் தொண்டினைத் 
 தமிழுலகம் நன்கறியும். இப்பொழுது இத்திருமடத்தின் ஆதீனத் தலைவராக 
 விளங்கும் கயிலைப் புனிதர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி 
 அடிகளார் அவர்களுக்கு இந்த ஆண்டில் (1986) அறுபதாவது ஆண்டு 
 நிறைவெய்துகின்றது.
கொங்கு நாட்டின் 
 சமய சமுதாய வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் 
 அடிகளார் அவர்கள் மிகப்பெருந் தொண்டாற்றி வருகின்றார்கள். சென்னைப் 
 பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக (1972 - 1978) அடிகளார் 
 அவர்கள் பணியாற்றியபோது தமிழ் மொழி வாயிலாகவே அனைத்து 
 அலுவல்களும் நிகழவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டு உழைத்தார்கள்.
 தமிழ்க் கல்லூரிகளில் பி.லிட். பாடத்தைக் கொண்டுவந்து தமிழ்க் 
 கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகளுக்கு இணையான நிலைக்கு உயர்த்திய 
 பெருமை அடிகளார் அவர்களையே சாரும்.
கொங்குநாடு முழுவதும் 
 அனைத்து ஊர்களிலும் சமய சமுதாய 
 விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர் அருளாளர் பெருந்தகை அடிகளார் 
 அவர்கள். அவர்கள் திருவடி படாத ஊர்களே கொங்கு நாட்டில் இல்லை 
 எனலாம். சமயத்தையும் சமுதாயத்தையும் இரு கண்களாகக் கொண்டு அவர் 
 ஆற்றிவரும் பணிகள் அளப்பில. அவர்தம் அருட்பார்வையால் நலம் 
 பெற்றோர் பலராவர்.
அன்பர்கள் அவர்தம் 
 மணிவிழாவைப் பெருவிழாவாகக் கொண்டாட 
 விழைந்தனர். எனவே மணி விழா நினைவாகக் 'கொங்கு மண்டல 
 சதகங்கள்' என்னும் இப்பெருநூலை வெளியிடுவதில் பெரிதும் 
 மகிழ்கின்றோம். கொங்கு நாட்டுக்காக உழைத்துவரும் அடிகள் பெருந்தகை 
 அவர்கள், 'கொங்கு மண்டல சதகங்கள்' என்னும் இந்நூலினை எங்கள் 
 காணிக்கையாக ஏற்று வாழ்த்துமாறு வேண்டுகின்றோம்.
இத்தொகுப்பு நூல் கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் 
 கவிராயர், 
 கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய கொங்கு மண்டல சதக நூல்கள் 
 மூன்றினையும் கொண்டதாகும். 
 
						