தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

-


viii

திருமண முறைகள்

கொங்குநாட்டில் உள்ள வேளாளரின் திருமண நெறி முறைகளைப்
பற்றிய செய்திகளும் 'கம்பர் வாழி' சொல்வதும் பற்றிய குறிப்புகளும் உண்டு.
'வளவன் எழுத்துப்படிக் கம்பர்க்கான வதுவைவரி தெளியும் பழந்தமிழ்
ஐவாணர்' என்று (30) ஒரு பாடல் கூறும். இதுகுறித்து உரையாசிரியர் தரும்
செய்தி வருமாறு: 'கொங்குமண்டலத்தார் பெரியநாடு என்று பாராட்டும்
கீழ்க்கரைப் பூந்துறைத் தலைமை நகரான திருச்செங்கோட்டில், மலை
முதற்படி அருகிலுள்ள அழகிய விநாயகர் சந்நிதியில் படிகாரர்கள் சபை
ஒன்று பன்னிரண்டு ஆண்டு அளவில் கூடுகிறது. அப்பொழுது இனிக் கம்பர்
உரிமையிற் பங்குபெறக் கூடியவர் இவரெனத் தேர்ந்தெடுத்துச் சபைத்
தலைவரால் வெற்றிலை கொடுக்கப் பெறுவது. அதன் பின்னர்தான் புலவர்
அட்டவணையிற் பெயர் பதியப்படுகிறது. இச்சங்ககாலத்தில் அப்போது
ஏற்படுஞ் சங்கத் தலைவரால் நியமன தாம்பூலந் தரப்பெறாதவர்
பன்னூலாய்ந்த பாவலராயினும் படி (வரி)ப் பணத்தில்
பங்குகொடுக்கமாட்டார்கள். கலியாணம் முதலிய சபையில் வாழி சொல்லுந்
தகுதியனல்லன் என்பது அச்சங்கத்தாரின் கொள்கை. கொங்கு வேளாளர்
கலியாணங்களில் இப் புலவர்கள் கம்பர் வாழி சொல்லாவிடில் மணச்சடங்கு
முழுமையானதாகாது.

முடிவுரை

சதகநூல்களில் காணப் பெறும் பலசெய்திகளும் அந்நாட்டு மக்களின்
கலை, பண்பாட்டுவரலாறு ஆகியவற்றைக் காட்டுவனவாக உள்ளன.
இவற்றைக் கல்வெட்டு முதலிய பிறசான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
அண்மைக் காலத்தில் கொங்கு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு
தொல்பொருள் ஆய்வுகளும் இவற்றை உறுதிசெய்யும் வண்ணம்
அமைந்துள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கொங்குநாட்டின்
வரலாற்றை ஆய்வாளர்கள் தொடர்ந்துசெய்வதற்கு இத் தொகுப்புப் பெரிதும்
பயன்படக்கூடும் என்பதில் ஐயமில்லை.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 00:33:12(இந்திய நேரம்)