தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalingathuparani


மாலைநேரத்தே அக்குவட்டை அணைந்தவர் விடியளவும் காத்து
நின்றனர் எனக் கூறுகின்றார்:

'தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி
தொழுஅடைத்துத் தொழுவதனைக் காப்பார் போல
வேலாலும் வில்லாலும் வேலி கோலி
வெற்பதனை விடியளவும் காத்து நின்றே'.

காட்டினின்றும் வேட்டையாற் கொணர்ந்த காட்டுப் பன்றியைத்
தொழுவில் அடைத்து, அத்தொழுவைக் காத்து நிற்பவர்போல் என உவமை
கூறிக் கலிங்க வேந்தனின் இழிநிலையைப் புலப்படுத்தியது காண்க.

இனிப் பல இடங்களில் ஆசிரியர் இல்பொருள் உவமைநலங் கனியக்
கூறிப் பொருளைச் சிறக்கக் காட்டுகின்றார். குலோத்துங்கன் காஞ்சியில்
செய்தமைத்த சித்திர மண்டபத்தே அரியணையில், மேலே வெண்கொற்றக் குடை நிழற்ற, இருபாலும் கவரிவீச வீற்றிருந்த சிறப்பைக் கூறுகின்றவர்,

'மேற்க வித்தம திக்குடை யின்புடை
வீசு கின்றவெண் தாமரை தன்திருப்
பாற்க டற்றிரை ஓரிரண் டாங்கிரு
பாலும் வந்துப ணிசெய்வ போலுமே'

என்கிறார். மன்னன் இருபுறத்தும் இரு சாமரைகள் வீசப் பெற்றுச்
சுழன்றாடும் காட்சி, பாற்கடலின் அலை இருபுறத்தும் நின்று பணிசெய்யும்
தோற்றத்தை ஒத்திருந்ததாம். மற்றொன்று காண்க:

குலோத்துங்கன் நால்வகைப் படையும் சூழக் களிற்றின்மேல் ஊர்ந்து
புறப்படுகின்றான். மேலே வெண்கொற்றக்குடை நிழற்றுகின்றது; இருபுறத்தும்
கவரி வீசுகின்றனர். இக்காட்சியைக் காட்டப்புகும் ஆசிரியர்,

'மற்ற வெங்கடக ளிற்றின்உத யக்கி ரியின்மேல்
மதிக வித்திடஉ தித்திடும்அ ருக்கன் எனவே
கொற்ற வெண்குடைக விப்பமிசை கொண்டு கவரிக்
குலம திப்புடைக வித்தநில வொத்து வரவே'

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 10:55:01(இந்திய நேரம்)