Primary tabs
மக்களுடன் உறவுகொண்ட தமிழ்
இத்தகைய காலத்திலேதான் “திணைநிலைவரி”யாக ஐந்திணைக்கும் உள்ள பாடல்களின் சுவைநலங்களை யுணர்ந்த புலவர்கள் குறவஞ்சி, பள்ளு முதலிய நூல்களைச் செய்தார்கள். குறிஞ்சி நிலத்தைப் பற்றிக் குறவஞ்சியும், மருத நிலத்தைப் பற்றிப் பள்ளும் தோன்றின. ஏனைய மூன்று நிலத்திலும் இவ்வாறு நூல்கள் தோன்றவில்லை. அதனைக் கருதித் தமிழ்விடு தூது ஆசிரியர்.
*"குறமென்று பள்ளென்று
கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவென்று மூன்றினத்தும் உண்டோ"
என்று இரங்கிக் கூறுகின்றார். இத்தகைய நூல்கள் பாலை, முல்லை, நெய்தல் ஆகிய மூன்றிடத்திலும் தோன்றாத காரணத்தினாலே தமிழுக்கு அங்கு உறவில்லை என்று பொருள் கொள்ளும்படியாக அப்பாடல் அமைந்திருக்கின்றது. ஆகவே, இவ்விரண்டு நூலும் தமிழுக்கும் மக்களுக்கும் உறவு ஏற்படுத்தத் தோன்றிய நூல்கள் என்பதில் ஐயமில்லை. குறிஞ்சி நிலத்தாரும் மருத நிலத்தாரும் குறவஞ்சி, பள்ளு என்னும் நூல்களாகிய நங்கைகளைக் கொண்டார்கள்; தமிழ் கொடுத்தது. அதனால் பெண் கொண்ட இடம் கொடுத்த இடம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட உறவு போன்று தமிழுக்கும் அந்த இரு நிலத்து மக்களுக்கும் உறவு ஏற்பட்டது. மற்றப் பாலை, முல்லை, நெய்தல் ஆகிய மூன்று நிலத்தார்க்கும் தமிழுக்கும் கொள்வது கொடுப்பது இல்லாமற் போய்விட்டதனால் “உறவென்று மூன்றினத்தும் உண்டோ” என்று கேட்கின்றார். இவ்விரண்டு நூல்களின் பெருமையே அவ்வாறு பாடச் செய்தது.
பள்ளு நூல் பரவிய பாங்கு
இங்ஙனம் மக்களுக்குந் தமிழுக்கும் நெருங்கிய இலக்கிய உறவு ஏற்படச் செய்த பிற்காலத்து நூல்களில் திருமுக்கூடற் பள்ளும்; திருக்குற்றாலக் குறவஞ்சியுந் தலைமையான நூல்கள். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடெங்கும் தமிழ்
* இதற்குத் தமிழ்விடு தூதில் எழுதப்பட்டிருக்கும் உரை தவறு.