Primary tabs
இவையே திருக்குற்றாலக் குறவஞ்சிக்குத் துணையாக நின்றன. மீனாட்சியம்மை குறத்தில் திருமலைநாயக்கர் குறிப்பிடப் பெறுகின்றார். குமரகுருபர அடிகளைத் திருமலைநாயக்கர் பாராட்டியதுபோல் குறவஞ்சியாசிரியராகிய திரிகூடராசப்பக் கவிராயர் பெருமானையும் முத்துவிசயரங்க சொக்கநாதநாயக்கர் பாராட்டிச் சிறப்பித்திருக்கின்றார்.
திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பின்பற்றி எத்தனையோ குறவஞ்சிகள் எழுந்தன. அவையெல்லாம் இலக்கிய உலகில் மிளிர இயலாமல் மறைந்தன. முக்கூடற் பள்ளு திருக்குற்றாலக் குறவஞ்சிக்கு முன்பு தோன்றிய நூலாதலால் நாடெல்லாம் பரவி எத்தனையோ பள்ளு நூல்களையும் உண்டாக்கிவிட்டது. ஆகவே, தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் பள்ளு நூல் எல்லோரும் படிக்கும் நூலாக ஏற்பட்டது. குற்றாலக் குறவஞ்சி தோன்றிய பின்பு மாணாக்கர்க்கு முதலில் குறவஞ்சியையும் பின்பு முக்கூடற் பள்ளினையும் கற்பித்திருக்கின்றனர். குறவஞ்சி ஏடும் பள்ளு ஏடும் முன்னும் பின்னுமாக எழுதிப் போடப்பெற்றிருக்கின்றன. இந்தப் பதிப்பிற்குப் பல நல்ல திருத்தங்களை உதவியதும், நண்பரொருவரால் என்னிடம் தரப் பெற்றதுமாகிய சுவடியில் முதற்பகுதி குற்றாலக் குறவஞ்சி. அதன் முதல் ஏட்டில், உ. சிவமயம் - புலி, சொ. சுப்பிரமணியபிள்ளை குற்றாலக் குறவஞ்சி என்று குறிப்பிடப் பெற்றுளது. பிற்பகுதி முக்கூடற் பள்ளு. அதன் முதல் ஏட்டில், “தட்டுவங்குளம் நாராயணத் தேவர் குமாரன் சுடலைமுத்து படித்து வருகிற முக்கூடற்பள்ளு” என்று குறிப்பிடப்பெற்றுளது. இந்த இணைப்பு முறையும் குறவஞ்சி கற்ற பின்பு பள்ளு நூல் கற்பது பொருத்தம் என்பதைக் காட்டுகின்றது. இனிமேலும் மக்களுக்குந் தமிழுக்கும் நல்ல உறவு ஏற்பட வேண்டுமென்றால், குற்றாலக் குறவஞ்சியை முதலிலும் அதன் பின்பு முக்கூடற் பள்ளையும் முழுதும் பாடமாக வைத்து, இயற்றமிழாகவும் இசைத்தமிழாகவும் கற்பித்து நாடகத்தமிழாகவும் நடிக்கச் செய்தல் வேண்டும். இவற்றுடன் நந்தனார் கீர்த்தனையையும் படிக்கச் செய்து பின்பு பாரதியார் பாடலுடன் தொடர்பு கொள்ளச் செய்து மற்ற இலக்கியங்களுக்கு அழைத்துச் சென்றால் உண்மையான தமிழ்ப் புலமை உண்டாகும். இவற்றிற்கிடையில் நிகண்டும் ஓரளவிற்கு இலக்