தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

14
முக்கூடற் பள்ளு

"பகட்டுக் கமலை வட்டத்தில்--புனல்
 தகட்டுக் கமல குட்டத்தில்"

என்ற பாடமே பொருந்துதல் இந்நூலின் உரைநோக்கிக்காண்க.

47 ஆம் பாட்டில்,

"அவற்கிதுநீர் சொல்வீரே"

என்று பதிப்பித்துள்ளனர். “முக்கூடல் ஊரர்” என்று முதலடியில் பன்மையாகக் கூறியிருப்பதனால் கடைசியடியிலும் பன்மையாக “அவர்க்கிது நீர்” என்றே கூறவேண்டும். “அவர்க்கிதுநீர் சொல்லீரே” என்ற பாடமே சிறத்தல் காண்க.

48 ஆம் பாட்டில்,

"புடையிற் புள்ளினஞ் சரியவே - அதன்
இடையிற் புள்ளினம் இரியவே"

என்று பதிப்பித்து, புள்ளினம்-வண்டினம், பறவையினம் என்று குறிப்பும் எழுதியுள்ளனர்.

"புடையிற் புளினம் சரியவே-அதன்
இடையிற் புளினம் இரியவே"

என்ற பாடம் பழைய பதிப்பிலும் சுவடியிலும் காணப்படுகின்றது. (1) புளினம்-மணல் மேடு. (2) புளினம் (புள்+இனம்) பறவைக் கூட்டம். “மணல்மேடு சரிய” என்பது பொருத்தம். “வண்டினம் சரிய” என்பது பொருந்துவதன்று. ஆகவே “புளினம்” என்ற பாடமே சிறத்தல் காண்க.

இன்னும் அப் பாட்டில்,

"சார்ந்து சரிந்து நேர்ந்து-குறுக
வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே"

என்பதில் “சரிந்து” என்பது பொருந்துவதன்று. ‘சரிதல்’ என்னுந் தொழில் வெள்ளத்திற்கு ஏலாது.

"சார்ந்து சுறவு நேர்ந்து-குறுக
வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே"

என்ற பாடம் மிகவும் பொருந்துதல் உரை நோக்கிக் காண்க.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 17:44:50(இந்திய நேரம்)