Primary tabs
ஆராய்ச்சி முன்னுரை
(கழகப்புலவர் பண்டித, வித்துவான், தி. சங்குப்புலவர்.)
குமரகுருபர சுவாமிகள் பாடுஞ் செய்யுட்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பாட்டொலி கேட்டவர் இவர் பாடல் தான் இது என்று துணிந்து கூறுவதற்கேற்ற இன்னோசையமைந்திருக்கும். இவர் பிறந்த நாட்டுப் பொருநைநதி ஓட்டம் போலத் தோன்றும். படிப்பார் மனத்தையேயன்றிக் கேட்பார் மனத்தையும் தன்பால் ஈர்க்கும் இனிமையுடையது. சந்தம், மோனை, எதுகை முதலிய தொடையும், தொடை விகற்பமும் அமைத்துப் பாடுவதே இவர் இயல்பு. தன்மை, உவமை முதலிய அணிகளும் சார்ந்திருக்கும். தற்குறிப்பேற்றம் என்ற கற்பனையணியே கவின் பெற்றுப் பல கவிகளினும் நிற்கக் காணலாம் கற்பனைக் களஞ்சியம் என்றுதான் இவர் பாடிய நூல்கள் ஒவ்வொன்றையும் உரைத்தல்வேண்டும். ஆயினும் இவர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூலில் அமைந்துள்ள சொன்னயம், பொருணயம் வேறு நூலிற் காண்டல் அரிது. அதனாலன்றோ பிள்ளைத் தமிழ் நூல்களிற் சிறந்தது எனப் பெயர் பெற்றது இந் நூல்.
தமிழ்ப்பற்று
ஆசிரியர் குமரகுருபர், தமிழ்ப்பற்றுடையவர் என்பதை அவர் பாடிய நூல் பலவும் நன்கு விளக்கும். இந் நூலில் இவர் தமிழ்மொழியைப் பல செய்யுட்களில் விதந்து கூறியிருப்பதைக் காணலாம். அதனைக் கூறும் இடமெல்லாம் தக்க அடைமொழி கொடுத்தே கூறுகின்றார். மீனாட்சி யம்மையை “முது தமிழ் உததியில் வருமொரு திருமகள் (52) என்றும்,” நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ் சுவையே (61) என்றும், “தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்தகொடி" (33) என்றும், "மதுர மொழுகிய தமிழினியல் பயின் மதுரை மரகதவல்லி (3) என்றும் போற்றியிருப்பதே தக்க சான்றாகும் தமிழ்ப்பற்றைக் காட்டுவதற்கு.
காப்புக்கு முன்னெடுக்கும் பெருமையுடைய திருமாலைச் சிறப்பாகப் பாடத் தொடங்கியவர் “பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்றார், “பின் சென்றான்”என்று மட்டும் இழிவாகக் கூறினார் அல்லர், “கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ யிங்கிராதே” என்று புலவன் புனைந்த தமிழ்ப் பாடல் கேட்டான்; விரைவாகப் பின்றொடர்ந்தான். அவன் புனைந்த துளசிமாலைகள் சரிந்து அசைந்து துவண்டு புரண்டன. தேன் ஒழுகி வழியெல்லாஞ் சேறாயிற்று. அச்சேற்று வழியில் அவன் காதலி திருமகளும் பின்றொடர்ந்தாள். தொடர்ந்துவர இயலாதது கண்டு தன் கையையணையாகப் பற்றிவரும்படி கை கொடுத்தான். தான் படுத்திருந்த ஆயிரம் படப்பாம்புப் பாயையும் சுருட்டித் தோளில் தொங்கும்படி விடுத்தான். இம்முறையில் பின் தொடர்ந்தனன் எனத் திருமாலை மிகவும் இழிவுபடக் கூறித் தமிழை மிகவுயர்த்திக் காட்டுகிறார். இதன் மேலும் தமிழ் மொழிக்குப் பெருமை கூறல் வேண்டுமா? காப்புச் செய்யுளைப் படித்துக் காண்க.
மேலும் தமிழ் மொழியைக் கூறும் இடமெல்லாம் பைந்தமிழ் (2) வடிதமிழ் (3) மதுர மொழுகிய தமிழ் (2) தெளிதமிழ் (23) தென்னன் தமிழ் (23) தெய்வத் தமிழ் (48) முதுதமிழ் (52) செஞ்சொற்றமிழ் (53) தெள்ளித் தெளிக்கும் தமிழ் (9) தெளித்த பசுந்தமிழ் (31) இவ்வாறே தக்க அடைகொடுத்துக் கூறுவதும் அப்பண்பினை விளக்கும்.
(1) "சிகர வடவரை குனிய நிமிர்தரு
செருவி
லொரு பொருவில்லெனக் கோட்டினர்."
(2) "பமர மடுப்பக்
கடாமெடுத்தூற்றுமொர்"
(3) "கடகளி றுதவுக பாய்மிசைப்
போர்த்தவள்"
(4) "அமரில் வெந்நிடும வுதியர்
பின்னிடுமொ
ரபயர் முன்னிடுவ னத்தொக்க வோடவும்"
(5) "குருமணி வெயில்விட மரகத நிழல்விரி
குன்றே நின்றூதும்"
(6) "சங்குகி டந்தத டங்கைநெ டும்புய
றங்காய் பங்காயோர்"
(7) "முதுசொற் புலவர் தெளித்தப
சுந்தமிழ்
நூல்பாழ் போகாமே"
இவைபோன்ற சந்தம் அமைந்த கவிகளைப் படித்துச் சொன்னயம் காண்க.
மோனை முதலிய தொடையும், இணை முதலிய தொடை விகற்பமும் நாற்சீர் கொண்ட அளவடிக் கண்ணே அமைக்கப்பெறும் என யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியர் கூறினர் ஆயினும் மற்றையடிகளிலும் அவைகள் எங்கும் பயின்றுவரக் காண்கின்றோம், மோனை எதுகை இல்லாத பாடல் யாண்டும் பிற்காலத்தார் பாடியவற்றில் காண்பது அரிது. ஈண்டு ஆசிரிய விருத்தத்தில் ஆசிரியர் அமைத்திருக்கும் விதத்தையும் காண்போம்.
"கரைக்கும் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று"
"கன்னற் பெருங்காடு கற்பகக் காட்டுவளர் கடவுண்மா கவளங்கொள"
"மூலத்தலத்து முளைத்தமுழு முதலே முத்தம் தருகவே"
(நான்குசீர் மோனை.)
எதுகை
"கங்குன் மதங்கய மங்குல டங்கவி டுங்கா மன்சேம"
(ஐந்துசீர் எதுகை)
"வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியி லாளியென
(நான்குசீர் எதுகை)
“தொந்திச ரிந்திட வுந்திக ரந்தொளிர் சூலுடையாய்
( " )
“பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொரு பாண்டிப் பிராட்டி”
(மூன்றுசீர் எதுகை)
“இரைத்துத் திரைத்து நுரைத்தொரு ( " )
மூதண்ட வேதண்ட கோதண்டமோடு ( " )
விக்கிடக் கக்கிடத் தொக்கிடர்ப் படுதி ( " )
முரண்
“குனிய நிமிர்தரு” (இரண்டுசீர் முரண்)
“செஞ்சூட்டு வெள்ளோதிமம்” ( " )
“பெருநா ணெய்தச் சிறுநாண்” ( " )
“வெண்புயலும் கரும்புயலும்” ( " )
“செங்கயல் கிடக்கும் கருங்கட் பசுந்தோகை” (மூன்றுசீர் முரண்)
கார்கோல நீலக் கருங்களத் தோடொருவர் செங்களத்து (நான்குசீர் முரண்)
இயைபு
கடக ளிறுதவுக பாய்மிசைப் போர்த்தவள்
கவிகுவி ... ... ... தூர்த்தவள்
கடல் வயிறெரிய ... ... ... பார்த்தவள்
கடிகமழ்தரு ... ... ... சேர்த்தவள்
இவை போன்ற தொடை விகற்பம் பல செய்யுட்களில் அமைந்து சொற்சுவை பயப்பதைக் காணுங்கள்.
காப்புப் பருவத்தில் திருமகள் மென்மைத்தன்மையை விளக்குகின்றார். திருமகள், திருமால் மார்பில் வீற்றிருப்பவள் என்பது தெரியும் புலவர் அனைவர்க்கும். அவர் மார்பில் கௌத்துவ மணியொன்று புனைந்திருப்பதும் தெரியும். திருமகளுக்கு அம்மணி பருக்கைக் கல்லாக உறுத்தியது; பஞ்சூட்டிய சிற்றடி பதைத்து வருந்தினள்; அம்மணியின் ஒளி வெயில் அவள் உடலை வருத்தியது. ஒதுங்கு வதற்கு நிழல் தேடினள்; துளசிமாலைத் தொகுதிகண்டாள்; அத்தண்ணிழலில் தங்கினள். அவ்வாறு தங்கி வாழும் மெல்லியல்பு வாய்ந்த திருமகளை வணங்குகின்றேம்” என்றனர். இது புதுமைக் கற்பனையன்றோ?
பிரமன் பெற்றி பேசுகின்றார்; “நாகத்து மீச்சுடிகை நடுவட்கிடந்த மடநங்கையைப் பெற்று மற்றந், நாகணைத் துஞ்சுதன்றந்தைக் குவந்துதவு நளினக்குழந்தை காக்க” என்றனர். நளினக்குழந்தை என்பது தாமரைப்பூவிற் பிறந்த குழந்தை எனப் பொருள்பட்டுப் பிரமனுணர்த்தியது. அக்குழந்தை பாம்பின் உச்சி நடுவிற் படுத்துக் கிடந்த ஓர் இளமங்கையைப் பெற்றது; அம்மங்கையை யார்க்குக்கொடுப்பதென ஆய்ந்தது; பாம்புப் படுக்கையிற் படுத்துறங்குவோனே பொருத்தமானவன். எனத்துணிந்தது. தன் தந்தையாயினும் அவனுக்கே கொடுப்பது நலம் என மகிழ்ந்து கொடுத்து. இத்தகைய கூரறிவு வாய்ந்த குழந்தை அது. அக்குழந்தையே மீனாட்சியாகிய குழந்தையைக் காக்க என்ற கருத்துப்படக் கூறினர். உட் பொருளை ஆயாது வெளிப் பொருளைமட்டும் ஆய்ந்தால் வியப்பும் நகைப்பும் தானே விளையும்.
ஓர் குழந்தை மடமங்கையைப் பெற்றுத் தன் தந்தைக்குக் கொடுக்குமா? தந்தை மணவாளனாவானா தன்மைந்தன் பெற்ற பெண்ணுக்கு. உலகியலுக்குப் பொருந்திய செய்தியா? என்று வியந்து நகைத்துப் பின் உட்பொருளை யுணர்ந்து கண்ட பின் மனம் அமைதியுறும். பிரமன் பூமியைப் படைத்தான்; அப்பூமகளைத் தன் தந்தைக்குக் கொடுத்தான்; அவர் அப்பூமகளைக் காத்தும் உண்டும் உமிழ்ந்தும் கண்டு மகிழ்ந்தும் மனைக்கிழத்தியாகக்கொண்டும் வாழ்கின்றார் என்ற பொருளைக் கண்டவுடன் புலவர்க்கு வருங் களிப்புப் புகலற்பாலதோ? மயங்கித் தெளியும் வகை கருதிவைத்தனர் போலும்.
செங்கீரைப் பருவத்தில் “நீராட்டி” என்ற பாடலில் முதலில் தாய்மார் குழந்தையை யெடுத்து நீராட்டுவர் பின் துடைத்துச் சுண்ணம் பூசுவர்; நெற்றியிற் பொட்டிடுவர்; வெண்ணீறு பூசுவர்; நெற்றிச்சுட்டி சாத்துவர்; உச்சிக்கொண்டை முடிப்பர்; தலையிற் பல பணி புனைவர்; செவியிற் குதம்பையும் கொப்பும் அணிவர். இவ்வாறு கோலஞ் செய்த பின் கொங்கைப் பாலையூட்டுவர்; பாலூட்டிய பின் வாயிற் கனிந்தூறும் எச்சில் பட்டாடையை நனைக்கும்படி மடியில் வைத்துப் பாராட்டுவர் என முறையே அவர் செயலை விளக்கியிருப்பது குமரகுருபரர் உலகியற் காட்சியின் திறத்தை எடுத்துக் காட்டுகின்றது.
“அண்ட மீன்றளித்த கன்னி” என அம்மையைப் போற்றுவதற்கு ஏற்ப மீனாட்சியம்மை உலகத்தைச் சிற்றிலாக அமைப்பாள் என்றும், அழிக்குங் கடவுள் எனச் சிவபெருமானைத் துதிப்பதற்கு ஏற்ப அச்சிற்றிலை அழித்து விடுவன் அவன் எனவும் நயம்படக் கூறியிருப்பதைக் காண்போம். அவள் அமைக்கும் சிற்றிலுக்குச் சக்கரவாளகிரியே சுற்றுச்சுவர். அச்சுவர்க்குக் கால்கள் எட்டுத்திக்கிலுள்ள மலைகள்; தூண் இமயமலை. முகடுவான்வெளி; ஞாயிறும் திங்களும் விளக்கு; அண்டமெல்லாம் பழமையான கலங்கள்; புதுக்கூழ் இன்னமுதம் என்று உலகம் அமைந்து நிற்கும் நிலையையுணர்த்தும் விதம் வான்வெளியாராய்ச்சிவல்லாரும் கண்டு மயங்கத்தக்கதே. உலகத் தோற்றம் ஒடுக்கம் கண்ட தொன்முனிவர் போலும் இவர்.
தாலப்பருவத்தில் மருதநிலச் சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடும் மாண்பு கூறுகின்றார். அச்சிறுமியர்மணலை வளைத்துச் சிற்றில் கட்டிக் குடிபுகுவார்; சூட்டடுப்பு வைப்பார்; பவளக்கொடிகளை விறகாகப் பரப்பி அடுப்பில் வைப்பார். மாணிக்கத்தைத் தீயாகவைத்து ஊதிப்பற்றியதாகப் பாவிப்பார். குடம்போன்ற பெரிய சங்குகளைக் கொண்டுவந்து பானையாக அடுப்பின்மேல் வைப்பர். தேனைப் பிழிந்து உலை நீராக அப்பானையிற் பெய்வர். முத்துக்களைப் பொறுக்கி அரிசியாகப் பெய்து சோறட்டு உண்டு விளையாடுவர். இத்தகைய வளம்பொருந்தியது மருதநிலம் என்பது அவர் கூறுவது. சிறுமியர் விளையாடலை எங்ஙனம் சென்று அறிந்தனரோ இவர்? கண்டதுபோலக் கொண்டு கூறுவது பாராட்டத்தக்கதே!
“பொய்வந்த நுண்ணிடை” (34) என்ற கவியில் மீனாட்சியம்மையை உள்ளப் புணர்ச்சியுற்று உவகை யெய்தி நின்ற ஓர் உயிரோவியமாக வரைந்து காட்டுகின்றார். “தடாதகைப் பிராட்டியார் எட்டுத்திக்கினும் தம் வெற்றியை நிலைநாட்டக் கருதிப் போர்க்கோலம் பூண்டு தேர் ஏறிச் சென்றார்; வடகயிலை மலைப்பக்கம் வந்து நின்றார்; எதிரேற்ற சிவகணங்களையெல்லாம் வென்றார்; இவர் செயலறிந்து சிவபெருமான் வந்து கண்டார்; கண்டபோது மூன்று நகில்களில் ஒன்று மறைந்தது; மறைந்தவுடன் தம் காதலன் என அறிந்தார்: மறைந்த நகிலைப் பார்ப்பதுபோலத் தலைவளைத்து நின்றார். கடைக் கட்பார்வை காதலன்மேற் சென்றது; அது அவருக்கு அமுதவூற்றாக உயிர்தரும் மருந்தாக ஒளி வீசியது, நாணம் மேலெழுந்தது: தலை நிமிர்ந்து பார்த்திலர்; நெற்றியில் வெயர்வை நீரரும்பியது; ஏக்கத்தாற் பெருமூச்சுஎழுந்தது. தம்மை மறந்து தனி நின்றார். வளைத்த வில்லை மாநிலத்தில் ஊன்றினார்; வில்நுனியை விரல்நுனி தடவியது; உயிரோவியம்போல் உணர்ச்சியுடன் நின்றார்.” என்றார் ஆசிரியர். காமம் என்ற சுவைக்குரிய மெய்ப்பாட்டு நிலை கண்டவர்போல் விண்டனர். என்னே இவர் தம்புலமை!
தாயர் தந்தையர் தம் மக்கள் மெய்தீண்டுவதே உடற்கின்பம் என்றும், அவர் சொற்கேட்பதுவே செவிக்கின்பம் என்றும் மனங்கொள்வர், ஐம்புலனுகர்ச்சியால் அடையும் எவ்வின்பங்களும் மக்களைக் கண்டு மகிழ்வதால்வரும் இன்பத்திற்கு இணையாகாது என்பது யாவரும் அறிந்ததொன்றே! வள்ளுவரும் “மக்கண் மெய் தீண்டலுடற்கின்ப மற்றவர். சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” என்றார். இக் கருத்து விளங்க இவ்வாசிரியர் முத்தப் பருவத்தில் (45) மேகத்தினின்று விழு முத்தமும், கரும்பின் கணுவிற்றெறித்த முத்தமும், செந்தாமரை வெளியிற் சிந்துமுத்தமும், சங்கும் கமுகும் தந்த முத்தமும், மூங்கிற்கணுவின் வெடித்த முத்தமும், யானைத்தந்தத்தின் வந்த முத்தமும் அருமையான முத்தங்களேயாயினும் நின்
செங்கனி வாய்த் திரு முத்தத்தில் ஒரு முத்தத்திற் கிணையாகா” என்று கூறி நின் கூந்தல் முதலிய உறுப்புக்கட்குத் தோற்ற பொருள்கள் அவை” என்று மேலும் இழிவுபடுத்திக் கூறுகின்றார். பொருணயம் காண்க.
வருகைப்பருவத்தில் “தொடுக்குங் கடவுள்” (61) என்ற பாடலை ஆசிரியர் அரங்கேற்றும்போது மீனாட்சியம்மையார் ஓர் சிறுமியுருக் கொண்டுவந்து செவி மடுத்தனர் எனில் அதன் சொற்சுவையும் பொருட்சுவையும் சொல்லும் பான்மையதோ? பழம் பாடற்றொடையன் பயனே! தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே! தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே! இளமென் பிடியே! உயிரோவியமே! வஞ்சிக் கொடியே! மலயத்துவசன்பெற்ற பெருவாழ்வே! என்ற விளிகள் ஒவ்வொன்றும் உவமையாகுபெயராய் அம்மையார் தெய்வத் திருவருட் செயலைத் தெற்றென விளக்குகின்றன. அக்கவியில் “அகந்தைக் கிழங்கை யகழ்ந்தெடுக்கும் தொழும்பர்” என அடியாரைச் சிறப்பித்ததே பாராட்டற்பாலது. அகந்தை என்பது ஆணவம் என்று பொருள்படும். அது “நான்” என்றும் எனது என்றும் கருதி மயங்குவது; மூலமலம் என்றும் முன்னோர் கூறுவர். மக்கள் உள்ளமாகிய பள்ளத்தில் வேரூன்றிக் கிழங்குபோற் பருத்து இடங்கொண்டிருப்பதனால் அதனைக் கிழங்கு எனவும், அக்கிழங்கினை வேருடன் பறித்தெறிந்தவரே தொண்டராவர் என்றும், அவருள்ளமே தெய்வத்திற்குத் திருக்கோயில் ஆகும் என்றும் சுட்டிக்காட்டியது அவரது நுண்மாணுழைபுல வண்மைக்கு எடுத்துக் காட்டாகும்.
“காசினியிற் பிள்ளைக் கவிக்கம்புலி புலியாம்” எனப் பேசிய பெருமைவாய்ந்த அம்புலிப் பருவத்தை ஆய்வோம். சந்திரனே! நீ பதினாறு கலை வேறுபாடு உடையவன்; அம்மையும் அறுபத்து நான்கு கலை வேறுபாடுடையவள். அக்கலைகட்கு உறையுளாக இருப்பவன் நீ; அம்மையும் அக்கலைகட்கு உறையுளாக இருப்பவள். பாண்டியர் குல முதல்வன் நீ; அக்குலத்தின் வழி வந்தவள் இவள். சிவ பெருமான் சடைமுடியில் இருக்கின்றனை நீ, இடப்பாகம் இருக்கின்றாள் இவள். நீ திருமகளுடன் பிறந்தனை; அத்திருமகளை ஆருயிர்ப் பாங்கியாக அண்மையில் வைத்திருப்பவள் இவள். ஆதலால் பலவகையிலும் ஒப்புடையன் எனக் கருதி உன்னை யழைக்கின்றனள் இவள்” என ஒற்றுமை என்ற உபாயங் காட்டுகின்றார்.
இனி வேற்றுமை காட்டும்போது “தெய்வக்குழாம் குலத்தோடு கூடிப்பிழிந்து ஊற்றிக் குடித்துச் சுவைத்து உமிழ்ந்த கோது என்றும், நச்சுப்பாம்பின் எச்சில் என்றும், களங்கமுடைய கயநோயன் என்றும் இழிவுபடுத்திக் காட்டுகின்றார். மேலும் அம்மை வீற்றிருக்கும் கூடற்பதிகொடும் பாவங்களைப் போக்கிய தலம் என்றும், நீ குரவற்கிழைத்த கொடும்பாவமும், தக்கனாகிய மாமன் உனக்குத் தந்த சாபமும், உன் களங்கம், நரை, திரை, கூன் முதலிய பிறவும் இப்பதிக்குவரின் மாறும் என்றும் கூறுகின்றார்.
மற்றும் அம்புலியே! இளம்பருவத்தில் அம்மையின் நெற்றியழகைக் கவர்ந்து நிலவொளி வீசினை : அதனால் நிலாமுற்றத்திற் கன்னியர் கூடி எருவிட்டு வணங்கும் பேறு பெற்றாய். இது நீ முதலிற்செய்த சிறுபிழை. பின் முழுமதியாக வானில் வந்தபோது அம்மையின் திருமுகத்தழகைக் கவர்ந்து சென்றாய். இது அதனினும் பெரும் பிழை. அம்மைக்கு மாற்றளாகிய கங்கையுடன் கூடிக் கொண்கன் சடையில் அமர்ந்திருந்தாய் நீ. இப்பிழை பொறுக்கமுடியாத பெரும் பிழை; மறக்கமுடியாத பிழையும் ஆம். அதனையும் மறந்து உன்னையழைத்தனள் எனில் அம்மையின் பெருங்கருணை எம்மனோராற் கூறப்படுவதோ? பெருங்கருணைப் பெருமாட்டியுடன் விளையாடவா என அம்புலிக்குக் குற்றம் அமைத்த கற்பனைத்திறம் கவிஞர் வியக்கத் தக்கதன்றோ?
மேலும் இன்ன இன்ன தானம் பெறுவாய் என்றும், வாராதிருப்பின் இன்ன இன்ன தண்டம் பெறுவாய் என்றும் கூறி அம்புலியை விளிக்கும் முறை தனிச்சிறப்புடையதே. அம்புலிப்பருவப் பாடல்களை அறிஞர் ஆய்ந்து காண்க.
அம்மானைப் பருவத்தில் அம்மை முத்தாற்செய்த அம்மனையை எடுத்து வானில் எறிவது மணப்பந்தரில் சிவபிரான்மேல் அம்மையார் வெள்ளிய அமுதத்திரளையை எறிவதுபோலத் தோன்றுகின்றது (74) என்றும், செங்கையில் எடுத்தபோது சிவப்பு நிறமாகவும் கண்ணால் நோக்கியபோது கருப்பு நிறமாகவும் நகைத்தபோது வெண்ணிறமாகவும் தோன்றுங்காட்சி, மக்கள் உயிர்க்குரிய இயற்கைக் குணத்தை இராசதம், தாமதம், சாத்துவிகம் என்ற முக்குணங்களும் பற்றுவதுபோலும் (75) என்றும், முத்தாற்செய்த அம்மனை முன்செல்ல மாணிக்கத்தாற் செய்த அம்மனை பின்செல்வது, தாமரைப்பூ ஆகிய தன் மனையாட்டியைத் தோய்ந்து சந்திரன் செல்ல அவனைப் பின்றொடர்ந்து செல்லும் சூரியன்போலத் தோன்றுகின்றது (76) என்றும் கற்பித்துக் கூறியது புலவர்க்குப் புது விருந்தாகும். ஆசிரியர் துறவி; இல்வாழ்க்கையறியா இளந்துறவி. இவர் ஒருவன் மனையாளை மற்றொருவன் தோய்ந்து சென்றது கண்டால் உரியவன் சினத்துடன் பின்றொடர்வான் என்பதைக் கண்டு கூறியது எத்துணையருமையான ஆராய்ச்சி! எவரும் போற்றத்தக்க புதுமையன்றோ? இது.
நீராடற் பருவத்தில் ஓர் நிகழ்ச்சி காணுங்கள். அம்மை நீராட வையைக்குச் சென்றாள். வாணியும் உடன் சென்றாள் “அம்மையே! நின்காதலர் முன்னாள் பிட்டுக்கு மண்சுமந்த பெருமைபெற்ற இடம் இதுதான் என்று காட்டினள் அவள். கேட்டவுடன் மயங்கி வருந்திக் காதலாற் கசிந்து கண்ணீர்வார நெடிதுநின்றாள். அதனைக் கண்ட மற்றொருத்தி “அம்மே! இவ்வாறு கண்ணீர் வடித்தால் வையை வெள்ளம்பெருகி விடுமே. வெள்ளங்கண்டால் நின் காதலர் மீண்டும் மண்சுமக்க வருவரே! அவர்க்கு வேலை கொடுப்பது நினக்குத் தகுமா! விழிநீர் வழிவதை நிறுத்தி விரைந்து நீராடவா என்றனள்.
மற்றொருத்தி “தாயே நீ விரைவாக நீராடு. ஆடினால் நின் கொங்கையிலணிந்த குங்குமச் சேறு வண்டலாகி மண்ணோடு கலந்து மணம் நிறைந்த மண்ணாகும். நின் காதலர் வறிதாய வண்டல் மண்ணையே கூடைகட்டி வாரிச் சுமந்தவர். மணம்பெற்ற மண்ணைக் கண்டால் விரும்பி வருவார். நின் காதலரைக் காண்பதற்கு நல்ல சூழ்ச்சிதான் இது. மண்ணைச் சுமக்க அடிக்கடி வந்தால் நின் மாற்றவள் ஆகிய கங்கைக்குச் சடையிற் குடியிருப்பும் ஒழியும். மாற்றவள் தொலைந்தால் நினக்கு மனவமைதியும் உண்டாகும். நல்ல செயல்தான் நீ நீராடல். ஆயினும் அவர் மண்சுமக்க வந்தால் பிட்டுச் சுட்டுக் கொடுப்பதற்கு ஒரு முதியவள் வேண்டுமே! அடித்து வேலை வாங்குவதற்கும் ஓர் ஆள்வேண்டுமே! இவ்விரண்டு குறையும் எப்படி நிறைவிப்பது? ஆய்ந்து செய்வோம் நீ நீராடு” என்றாள்.
இதில் அருமைக் காதலரை அடிக்கடி மண்சுமக்க வரவழைப்பது பிழை என்பது ஒருத்தி கூற்று. வந்தால் நலம் என்பது மற்றொருத்தி கூற்று. நீராடாமல் நின்று கண்ணீர் வடித்தால் உன் காதலர் வருவார் என்பது ஒருத்தி கூற்று. நீராடினால்தான் வருவர் என்பது மற்றொருத்தி கூற்று. இவ்வாறு ஒன்றற்கொன்று மாறுபட்டு வியப்பும் நகைப்பும் விளைக்குமாறு கூறியது ஆய்வார் மனத்திற்கு அரிய விருந்தாகும்; சிறுமியர் விளையாடும் போது இவ்வாறு அசதியாடல் இயற்கை என்பதையுணர்ந்தே கூறினர் போலும்.
ஊசற் பருவத்தில் திருமகள் “மீனாட்சியம்மையின் திருவடிகளிற் பிறையழுத்திய தழும்பு கண்டனள் என்றும், அதனை வாணிக்குக் காட்டி வலம்புரிக் கீற்று இதுபார் என்று அசதியாடினள் என்றும் அதனைச் செவியேற்ற அம்மை நாணித் தலைகவிழ்ந்தனள் என்றும் சாற்றுகின்றார். இதன் உட்பொருள் யாது? அசதியாடுதற்குக் காரணம் என்ன? என்று ஆராய்வார்க்குப், புலனாகாது. மறைந்து நிற்கும் பொருள் எடுத்து விளக்கினாலன்றி விளங்காது. வேறு சில இடங்களிலும் இக்கருத்தை இவர் வெளிப்படுத்துகின்றார். ஊடற்காலத்திற் சிவபெருமான் முடி அம்மையின் அடியிற்படியும். அவ்வமையம் முடிமேல் அணிந்துள்ள பிறைக்கோடும் அழுந்தும். பன்னாளும் அவர் பணிந்து ஊடலைத் திருத்தும்போதெல்லாம் பிறைக்கோடு அழுந்தி அழுந்திச் சிவந்த வடுவாகும். அத்தழும்பைக் கண்டுதான் திருமகள் வலம்புரிக் கீற்றுப்போலும் இது என்று வாணிக்குக் காட்டி அசதியாடினள் என்று நாம் அறியவேண்டும். உலகியலில் நிகழும் ஊடலையும் கூடலையும் உணர்ந்து அம்மைக்கும் அப்பற்கும் கற்பித்தது புதுமைக் கற்பனையன்றோ?
இவர் அமைத்திருக்கும் கற்பனையும் உயர்வு நவற்சியும் உருவகமும் பிறவணிகளும் ஆங்காங்கே நின்று அணி செய்வன காணலாம்.
உவமை
மரகதத் திருமேனி (14) கொடிநுண்ணுசுப்பு (44) மழவேறு பொருவேலிளைஞர் (26) பொய்வந்த நுண்ணிடை (34) துண்டுபடு மதிநுதல் (54) கறையடி (83) கிளிமொழி (85) குடக்கனி (55) இவை போன்ற பல வுவமைகள் காணலாம்.
உருவகம்
கரடக்கரை, கடாமுடை கடல், சித்தமதா மொருதறி (4) பவக்கடல் (48) திருவருளமுது (42) உயிராலவாலம், உணர்வு நீர், (43) அகந்தைக் கிழங்கு, உளக்கோயில் (61) முதுதமிழுததி (52) மருதத் தச்சன், கமலக்கோயில், தடங்கா மணப்பந்தர், மேகபடாம் (59) இவை போன்ற பல உருவகங்களை இந்நூலிற் பரக்கக் காணலாம். உவமையினும் உருவகம் மிகப் பெருகி வருகின்றன. தற்குறிப்பேற்றம் அவற்றினும் சாலப்பெருகியெங்குந் தழைத்திருக்கின்றன. தற்குறிப்பேற்றம்தான் கற்பனை, கற்பனைக்கு உறைவிடம் ஆயது இப் பிள்ளைத்தமிழ் என்று துணிந்து கூறலாம். இன்னும் இந் நூலின் சிறப்பை எடுத்து விளக்கப் புகின் விரியும் எனக் கருதி விடுக்கின்றேன்.
இப்பிள்ளைத்தமிழ் ஒன்றைக் கற்றால் மற்றைப் பிள்ளைத்தமிழ் கற்பது மிகவும் எளிதாகும். ஆதலால் தமிழன்பர் யாவரும் இதன் அருமை பெருமையுணர்ந்து உரையுடன் வாங்கிக் கற்றுப் புலமைபெற முயல்க.