நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி
நலஞ்சுடரே நால்வேதத் தப்பா னின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்றி
சொலற்கரிய சூழலா யிதுவுன் றன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.
தமிழ்நாட்டில் பண்டைக்காலந் தொடங்கித் தமிழ்பயிலும் மாணாக்கர்கள் முதலில் சிறுநூல்களைக் கற்றல் வழக்கமாக இருந்தது. அந்தாதி, சிலேடை, வெண்பா, மாலை, கலம்பகம், கோவை, மடல், பரணி என்பவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப படித்து வருவார்கள். தமிழில் அடிப்படையான உணர்ச்சி வருவதற்குப் பிரபந்தங்கள் உதவியாக இருத்தலின் அவற்றை வித்துவான்கள் கருவி நூல்கள் என்று வழங்குவர்.
அவ்வக்காலங்களில் தமிழ்மொழியில் புலவர் பெருமக்களால் இயற்றப்பெற்ற பிரபந்தங்கள் பல இருப்பினும் சில பிரபந்தங்களே பயிலப் பெற்று வந்தன. எவ்வளவோ அந்தாதிகள் இருப்பினும் திருப்புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி முதலிய சிலவற்றையே தமிழ் மாணவர்கள் மிகுதியாகப் படித்து வந்தனர். இவ்வாறு தமிழ் பயில்வாரிற் பெரும்பாலோர் தவறாமல் படித்துப் பயன்பெறும் பிரபந்தத் தொகுதிகளுள் முன்வரிசையிலே நிற்பது குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் தொகுதி. அஷ்டப்பிரபந்தம், சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபந்தத் தொகுதி, சிவஞான சுவாமிகள் பிரபந்தங்களென்பவையும் அந்த வரிசையிலே அடங்கும்.