Primary tabs
தாயுமானவடிகள் திருப்பாடல்கள்
iii
சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களால் பதிப்பிக்கப்பட்டு" வெளிவந்த தொன்று. 1916 இல் சித்தாந்த சரபம் - அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் அவர்கள் இயற்றிய மெய்கண்ட விருத்தியுரையுடன் S. R. மாணிக்க முதலியாரவர்களால் வெளிப்படுத்தப்பட்ட தொன்று. 1937 இல் யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகா வித்துவான் நா. கதிரைவேற் பிள்ளை யவர்கள் செய்த பேருரையுடன் பி. நா. சிதம்பர முதலியார் அவர்களால் வெளிவந்த தொன்று.
சில ஆண்டுகளாக முன்னுள்ள பதிப்புகளில் ஒன்றும் கிடைப்பதற்கில்லை. செந்தமிழிலுள்ள பண்டைய இலக்கிய இலக்கணங்கள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், புராணங்கள், உலா, கலம்பகம், தூது முதலிய சிற்றிலக்கியங்கள் வரலாற்று நூல்கள் முதலிய பலவும் உரையுடனும் விளக்கங்களுடனும் வெளியிட்டுப் போற்றி வருங் கழகத்தார் தாயுமானவடிகள் திருப்பாடல்களையும் சிறந்தவுரையுடன் வெளியிடக் கருதினர். எனவே கழகப் புலவர் சித்தாந்த பண்டிதர் திருவாளர்
ப. இராமநாத பிள்ளை யவர்களைக் கொண்டு 'சித்தாந்தச் சிறப்புரை' எழுதச் செய்து வெளியிடப் பெற்றதே இச் சீரிய நூலாகும். கழகப் புலவரவர்கள் தம் வாழ்நாளெல்லாம் சித்தாந்தத் தொண்டும், திருமுறைத் தொண்டும், திருக்குறள் தொண்டுமே புரிந்து வருகின்றனர். இவற்றைப் பற்றிப் பல வகுப்புகள் பல இடங்களில் நடத்தி வருகின்றனர். திருமந்திரம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள் முதலியவற்றிற்கு விளக்கவுரையும், சிவஞான போதச் சிற்றுரை விளக்கமும் எழுதியுள்ளனர். அவர்களே தாயுமானவடிகள் திருப்பாடல்களுக்குச் சித்தாந்தச் சிறப்புரையோடு ஆராய்ச்சி முன்னுரையும் எழுதியிருப்பது மிகவும் பாராட்டுதற்குரியதாகும்.
இவ்வுரை கொண்டு தாயுமானவடிகள் தெய்வநெறிக் கொள்கையினையும், திருமுறைப் பெருமைகளையும், சித்தாந்தச் செம்பொருள் நுணுக்கங்களையும் யாவரும் எளிதினுணர்ந்து கொள்ளலாம். இதன்கண் மேற்கோளாக ஐந்நூறு பாடல்களுக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ளன.
செந்தமிழன்பர்களும், செந்நெறிச் செல்வர்களும் இதனை வாங்கிக் கற்றுப் பயன் பெறுவார்களாக!
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.