தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thanikai Puranam

ஆராய்ச்சி முன்னுரை

[பெருமழைப்புலவர், பொ. வே. சோமசுந்தரனார்]

'தணிகைப் புராணம்' என்னும் இத்தண்டமிழ்ப் பெருங்காப்பியம் நந்தமிழகத்தில் கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டிற்றோன்றிய தமிழிலக்கியங்களிற் றலை சிறந்ததொரு பேரிலக்கியமாகும். இதனை இயற்றியருளிய புலவர் பெருமான் கச்சியப்ப முனிவர் எனும் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் மெய்த்தவத் துறவோர் ஆவர். இத்தகைய துறவோரே மக்கட்கு உறுதிப் பொருள்களை யுணர்த்தும் தகுதியுடையோராவர் என்பதனை, திருக்குறளில் 'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்திற்கு ஆசிரியர் பரிமேலழகர் முன்னுரையில் "அஃதாவது, முற்றத்துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ்வறமுதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறுணர்த்துவார் அவராகலின் இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது," என்று நுண்ணிதின் ஓதுமாற்றா லுணரலாம். தணிகைப் புராணத்தைத் திருவாய்மலர்ந்தருளிய கச்சியப்பமுனிவர்தாமும் தாமெடுத்துக் கொண்ட திருக்கோயிற் சிறப்புக்களையே பாரித்துக் கூறுகின்ற ஏனைய கோயிற் புராணங்களைப் போலாது இப்புராணத்தில் தணிகையின் பெருமை கூறுமாற்றால் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத 'அறம் பொருள் இன்பம் வீடு' என்னும் உறுதிப்பொருள் நான்கனையுமே கூறுமொரு பெருங் காப்பியமாகவே இயற்றியிருக்கின்றனர். இவ்வாற்றால் புராணங்களுள் வைத்து இத்தணிகைப் புராணம் தனிப் பெருஞ் சிறப்புடையதாம்.

இனி, நமது செந்தமிழ் நூல் வரலாற்றை நோக்கின் இலக்கியங்கள் காலந்தோறும் புதிய புதிய முறையிலே தோன்றி யிருத்தலை யுணரலாம். மிகப் பழைய நம் இலக்கியங்கள் பாட்டுந் தொகையும் கீழ்க்கணக்கும் என்னும் முக்கூற்றனவாய் அமைந்திருத்தலும், சங்க நூல்கள் என்னும் இவற்றிற்குப் பின்னர் ஐம்பெருங் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் ஆகிய இவையெல்லாம் ஒருவகைப்பட்ட இலக்கியங்களாக அமைந்திருத்தலும், இக்காப்பியங்களின் பின்னர்த் தேவாரமே, திருவாசகமே, பிரபந்தங்களே என்னும் இவையெல்லாம் ஒருவகைப்பட்ட இலக்கியங்களாக அமைந்திருத்தலும், இவற்றிற்குப் பின்னர்த் திருத் தொண்டர் புராண முதலிய புராணவகை இலக்கியங்களும் பிறவுமாக அமைந்திருத்தலும் காண்க.

நமது செந்தமிழில் உள்ள எல்லா இலக்கியங்கட்கும் முற்பட்ட நூலாகும் தொல்காப்பியம் என்னும் நமது வியத்தகு மிலக்கண நூல்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:34:02(இந்திய நேரம்)