Primary tabs
கோதிய எல்லா வுறுப்பினும் சிறிதும் குறைபாடின்றி இருக்கவும் பிறிதொரு செய்யுள் சிறிதும் சுவையின்றி யிருத்தற்கும் காரணம் என்ன என்று நீள நினைந்து பார்த்திருத்தல் வேண்டும். இதற்குக் காரணம் தொல்காப்பியத்திற் கூறப்படவில்லை. ஆதலால் அதனை யாம் கூறவேண்டும் என்று துணிந்து அக்காரணம் இதுதான் என்று நம்மனோர்க் குணர்த்தியுள்ளார். இச் சிறப்பு தொல்காப்பியர்க்கும் இல்லாது பவணந்தியார்க்கே உரிய தனிப்பெருஞ் சிறப்பே என்பதில் ஐயமில்லை. அப் பெரியார் செய்யுள் என்னும் பெயர்க்கிலக்கணமோதுமாற்றால் ஓதுகின்ற அந்த ஒப்பற்ற நூற்பா வருமாறு :-
(பெயரி. 268)
என்பது அப் பல்கலைக்குரிசில் அதற்குக் காரணங் கண்டு நுண்ணிதின் ஓதிய நூற்பாவாகும்.
இவ்வருமந்த நூற்பாவிற்கு உரை வரைந்த ஆசிரியர் பலரும் இதன்கண் முனிவர் 'உணர்வினின் வல்லோர்' என்ற சொற்பொருளின் சிறப்பினை உணராமல் அதற்குக் "கல்வி யறிவினால் செய்யு ளியற்ற வல்லோர்" என்று சிறப்பில்லா வறும் பொருளே கூறி யொழிந்தார். வாய்மையாகவே உணர்வினின்வல்லோர் என்று பவணந்தியார் கூறியது அழகே உணரும் உணர்ச்சியின்கண் வன்மை யுடையோர் தம்மையேயாம் என்றுணர்க. செய்யுள் உறுப்புக்களிற் சிறிதும் குறைவின்றி யிருந்தாலும் இவ்வழகுணர்ச்சி குறைந்தோர் செய்யும் செய்யுள் சுவையற்றவைகளாகவே இருக்கும். மற்று, அவ்வுணர்வினின் வல்லோர் செய்யும் செய்யுள்களோ ஓரோவழிச் செய்யுளிலக்கணம் குன்றியவிடத்தும் செய்யுளின்ப முடையனவாகத் திகழ்தலைக் காணலாம். ஆயினும் செய்யுள் செய்யும் ஆற்றலும் அதற்கின்றியமையாத உணர்வு வன்மையும் இயற்கையிலே உடையராக விருப்போரே நல்ல புலமையுடையோராவர். இவைகள் ஒருவனுக்கு ஒரு பிறப்பிலேயே எய்துவன வல்ல. பண்டும் பண்டும் இயற்கை யழகிலே பற்பல பிறப்புக்களிலே நெஞ்சம் பறிகொடுத்துப் பயின்று வருவதனால் அவர் உள்ளத்தே பெருகி வருமொரு பெருஞ் செல்வமே இப்புலமைச் செல்வம். இங்ஙனமிருத்தலானன்றோ பேரிசைப் புலவர் சிலர் மழலை மொழி மாறாத இளம் பருவத்திலேயே மிகச் சிறந்த செய்யுள்களை மிக மிக எளிதாகவே பாடத்தொடங்கி விடுகின்றனர். இவர்கள் அழகுத் தெய்வமாகிய கலைமகளின் திருவருட்குப் பெரிதும் அணுக்கரானவர். ஆதலால் இத்தகைய பேற்றினையுடையோரைக்