Primary tabs
என்றோதுவர். திருத்தக்க தேவர் கொடி "விண்ணுலகே ! நீ கீழிறங்கி வந்து எம்மிராசமாபுரத்திற்கு அடங்கிக் கிட" என்றும், இன்றேல் உன்னை அழிப்பேம் என்றும் அறை கூவி நிற்கின்றன. பிற்காலத்து நம் கச்சியப்ப முனிவர் கண்ட இத் தணிகை நகரத்துக் கொடிகளோ யாதொரு தடையுமின்றி விண்ணுலகிலேயே புகுந்து அதன் மதிலரணைத் தாக்கி, "உயர்ந்த எந்தணிகையை நீ சிறிதும் ஒவ்வாய் காண் ! தாழ்ந்த நீ உயர்ந்த இடத்திலிருப்பது முறைமையன்று, ஆதலால், நீ இவ்விடத்திராமல் கீழே போ !" என்று நாடு கடத்துகின்றன. இத்துணையே வேற்றுமை. இன்னும் திருத்தக்க தேவர் தாங்கண்ட இராசமாபுரத்து மக்கள் மாபெருஞ் செல்வர் என்றும், இவர்தாம் தமது பேரணிகலம் நழுவி வீழ்ந்து விட்டாலும் குனிந்து மீண்டும் அவற்றை எடுத்துக் கோடல் தம் பெருமைக் கிழுக்கென்று கருதி எடாமலே போவார் எனின், இத்தகையோர் செல்வப் பெருமையை யாரே இயம்பவல்லார் என்றும் செப்பி மகிழ்கின்றார்.
இனி, இத் தணிகையின்கண் வாழும் தாழ்விலாச் செல்வர் தாமும்,
(திருநகரம் - 96)
என்று இக் கச்சியப்ப முனிவரும் இயம்புவர்.
இவ்வாறு இக் கச்சியப்ப முனிவர் தமது பழந்தமிழ்க் கருவூலந் திறந்து இன்றியமையாதவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுதல் அவர்க் கிழுக்காகாது. பாட்டனார் பணப்பேழையைப் பெயரனார் கையாளுதல் முறையே யன்றிப் பிழையாதலில்லை. புலவர் பெருமக்கள் அனைவரும் ஒரே குலத்திற் றோன்றிய தாயத் தார்களே யாவர். புலமையாளர்கட்கு இடவேறுபாடு கால வேறுபாடு சமய வேறுபாடு மொழி வேறுபாடு என்பன சிறிதும் இல்லை. தமிழ்நாட்டுக் கச்சியப்பரும் கம்பநாடரும் வடநாட்டுக் காளிதாசரும் வான்மீகியாரும் ஆங்கில நாட்டுச் சேக்குப்பிரியரும் மிலித்தனாரும் பண்பினால் மிக மிக அணுக்கமானவர். ஒரே குலத்திற் பிறந்தவர். திருவள்ளுவன் கருத்து ஒன்றனை மேலைநாட்டு மிலித்தன் ஓதி