Primary tabs
எனவரும் இச் செய்யுளின்கண் இராமனும் இலக்குவனுந் தழுவிக் கொண்டது திருமாலும் சிவபெருமானும் தழுவிக் கொண்டாற் போன்றிருந்தது என்கின்றார். சிறப்பை நிலைக்களனாகக் கொண்டெழுந்த இவ்வுவமை கம்ப நாடருடைய சமய வெறியின்மையை நமக்கு மறைவாக ஓதி உவமைத் திறத்தாலும் பேரழகுற்றுத் திகழ்கின்றதாயினும் இவ்வுவமை காட்சிப் பொருளுக்குக் காட்சிப் பொருளே உவமையாக வருதலின் ஓர் எளிய உவமையே யாகும். 'ஆப்போலும் ஆமா' என்பது போல்வதே இது. இனி மற்றோரிடத்தே இந்த இராமனும் பரதனும் தழுவிக்கொள்ள நேர்ந்த பொழுது அவர் கூறும் வியத்தகு உவமை ஒன்றனைக் கேண்மின் !
என வருகின்ற இச் செய்யுளின்கண் இராமனும் பரதனும் தழுவிக் கொள்வது அன்பும் அறமும் தழுவிக்கொள்வது போன்றுளது என்று கூறுகின்றனர். ஈண்டு இராமனும் பரதனுமாகிய காட்சிப் பொருள் பொருளாக, அன்பும் அறமுமாகிய கருத்துப் பொருள்களைக் கம்பநாடர் அவற்றிற்கு உவமை எடுத்திருத்தலைக் காணலாம். இந்த வுவமையின் ஆழம் பெரிது. இராமனையும் பரதனையும் கம்பர் இங்கு நமக்கு இந்த வுவமையாலே விளக்கக் கருதுகின்றிலர். அவர் கருத்து, இந்த இராமன் வாயிலாக அன்பின் அளக்கலாகாப் பெருமையினையும் பரதன் வாயிலாக அறத்தின் துளக்க லாகாச் சிறப்பினையுமே நம்மனோர்க்கு உணர்த்துதலே யாகும். இவ்வாறு புலவன் தான் உணர்த்தக் கருதிய பொருளை உவமையாக எடுத்துக் கொண்டு வேறொரு பொருளை உணர்த்துவான் போல அப்பொருளாலே உவமையையே விளக்கும் அருமை வித்தகப் புலமையாளர்க்கே கைவந்த பண்பாகும். இதற்குக் காரணம் கருத்துப் பொருட்குக் காட்சிப் பொருள் சிறந்த உவமை யாகாமையேயாம்.
ஈண்டு, அன்பும் அறமும் ஒன்றில் வழி மற்றொன்றும் இல்லையாம் அத்துணை இயைபுடையன அவ்விரு பண்புகளும். எவ்வாறெனில் இராமனும் பரதனும் போல என்று கூறின் அன்பும் அறனும் நன்கு விளக்கப்படாமை யுணர்க.