Primary tabs
வீராட்டகாசம்
திருக்கைலாயமலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். அவர்கட்கு நடுவில் முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது அந்த இடத்திற்குச் சந்திரகாசன் என்பவன் வந்தான். அவன் சிவகணங்களுக்குட் சிறந்தவன். அவன் சிவபெருமானைப் பலவாறு புகழ்ந்து போற்றினான். தனக்குப் பிரணவப் பொருளை உரைத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமான் திருவருள் செய்து சந்திரகாசனுக்குப் பிரணவப் பொருளை உரைத்தருளினார். முருகக் கடவுள் சிவபெருமான் சந்திரகாசனுக்குரைத்தருளிய பிரணவப் பொருளுரையைத் தெரிந்துகொண்டார். ஆனால் தாம் அதனைக் கேட்டுணர்ந்து கொண்ட தன்மையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நாட்கள் பல
சென்றன.
பிறகு முருகக்கடவுள் இறைவனையும் இறைவியையும் விட்டுத் தனியாக விருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனுஞ் சிவபிரானை வழிபடற் பொருட்டுத் திருக்கைலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் இம் முருகன் சிறுவன் தானே இவனை எதற்காக வணங்கவேண்டும் என்னும் எண்ணமுடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.
இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சங் கொண்டவர்களாய்த் திக்குக் கொருவராக ஓடிப்போயினர்.
முருகக்கடவுள் நான்முகனைப்பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால் எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால் என் தம்பியால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்கமாட்டாய்; எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று