Primary tabs
போற்றினர். அவர் இவர்களுக்கு முருகக் கடவுளின் பெருமையை எடுத்து உரைத்தார். பிறகு ஒருநாள் திருணபிந்து முனிவர் சிங்கனுக்குந் தாரகனுக்குங் காளியின் பெருமையையும் ஐயனாரின் சிறப்பையுஞ் சொன்னார். சூரன், சிங்கன், தாரகன் என்னும் மூவரும் முறையே ஊர்தியான மயில், சிங்கம், யானை ஆகும் பெருமையையும், பதுமன் குமாரக் கடவுளின் கொடியான கோழியாகும் பெருமையையும் அடைய விரும்பினர். அதற்காக மிகுந்த விருப்பத்தோடு அவ்வக் கடவுளை நோக்கித் தவம் புரிந்தார்கள். முன்னரே ஊர்தியாகவும் கொடியாகவும் இருந்த மயிலுங் கோழியும் இவர்கள் இவ்வாறு தங்கள் பதவியைக் கவர்ந்து கொள்வதற்குத் தவம் புரிதலை உணர்ந்து, "எங்கள் பதவியை நீங்கள் பறித்துக் கோடற்கு முயலுகிறபடியினால் பூதகணங்களாகக் கடவீர்கள்" என்று இந் நால்வருக்கும் வசவுரை வழங்கின.
இவ்வாறு வசவுரையினால் பூதகணங்களாகிய நால்வரும் சிவ கணங்களோடிருந்தபோது தேவர்களோடு சேர்ந்துகொண்டு அசுரர்களைத் தொலைத்தன. அசுரர் தலைவன் இச் செய்தியைச் சிவ பிரானிடம் இயம்பினான். சிவபிரான், "எமது கட்டளையில்லாமல் நீங்கள் தேவர்கட்கு உதவி செய்யும் பொருட்டுக் காவல் வேலையை விட்டுச் சென்றீர்கள். ஆகவே அசுரர் குலத்திற் பிறந்து அத் தேவர்கட்கே துன்பஞ்செய்யக் கடவீர்கள்" என்று வசவுரை வழங்கினார். இவ்வாறு அவுணர் குலத்தில் தோன்றிய சூரன், பதுமன் (சூரபதுமன்), சிங்கன் (சிங்கமுகாசுரன்), தாரகன் (தாரகாசுரன்) என்னும் இவர்கள் தேவர்கட்கு மிகுந்த துன்பம் விளைவித்தனர். தவஞ் செய்துகொண்டிருந்த இவர்கட்கு வசவுரை வழங்கிய மயிலையுங் கோழியையும் முருகக் கடவுள் சினந்து, "தவத்தைக் குலைத்த தீவினையால் நீங்கள் எமக்கு அண்மையில் இருக்கும் பேற்றை இழந்தீர்கள்" என்று கூறி அவைகளை விலக்கினார். அவைகள் காஞ்சிமாநகரை யடைந்து முருகப்பெருமானை நோக்கித் தவஞ் செய்து அவருடைய திருவடி நீழலை யடைந்தன. சூரபதுமனும் அவனுடைய தம்பியரும் செய்யுங் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள் முருகக் கடவுளிடம் முறையிட்டனர். முருகக் கடவுள் தேவர்களுடைய முறையீட்டுக்குத் திருவுளம் இரங்கித் தம்முடைய வேற்படையினால் சூரபதுமனைப் பிளந்தார். சூரன் மயிலாகவும், பதுமன் கோழியாகவும் மாறித் தாங்கள் முதலில் விரும்பியவாறே முருகக்கடவுளைத் தாங்கும் மயிலாகவும் கொடியாகிய கோழியாகவும் ஆயினர்.
சிவபிரானுடைய வசவுரையினால் அசுரர்களான சிங்கனுந் தாரகனும் முருகக்கடவுளால் அழிக்கப்பட்ட பிறகு தாம் முதலில் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கருதினர்.