Primary tabs
கூறினார். நம்பிராசன் இன்று நமக்கு நல்ல காலம் என்றுஉள்ளம் மகிழ்ந்தான். "அடிகட்கு என்ன வேண்டும் ?" என்று கேட்டான். முதுமைக் கோலம் பூண்டு வந்த முருகவேள், "நாம் இம்மலையிலுள்ள குமரியாட வந்தோம்" என்று கூறினார். நம்பிராசன் "அவ்வாறாயின் நீங்கள் சொன்ன திருத்த நீரில் நாள்தோறும் நீராடிக் கொண்டு இங்கு தனித்திருக்கும் என்னுடைய மகளுக்குத் துணையாக இருங்கள்" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டுச் சென்றான்.
நம்பிராசன் சென்ற பிறகு முதுமைக் கோல முருகர் பசியால் மிகவும் வாடினவர் போல நடித்தார். வள்ளியம்மை தேன்கலந்த தினைமாவைக் கொடுத்தாள். முருகப்பெருமான் அதனை வாங்கி யுண்டவுடன், "அந்தோ நீர் வேட்கை மிகுதியாக இருக்கிறதே" என்று சொல்லித் துடித்தார். வள்ளியம்மை முதுமைக் கோல முருகரைப் பார்த்து, "இம்மலைக்கு அப்பால் ஏழு குன்றுகளைக் கடந்து சென்றால் அவ்விடத்தில் ஒரு சுனை இருக்கிறது; அங்குச் சென்றால் தண்ணீர் அருந்தலாம்" என்று கூறினாள். முதுமைக் கோல முருகர் "என் நா உலர்ந்து விட்டது. இம்மலைகளில் உள்ள வழிகளை நான் அறியேன். நீ கூட வந்து சுனையைக் காட்டுவாயாக" என்று சொன்னார். வள்ளியம்மை உடன் வரச் சுனைக்குச் சென்று நீர் அருந்தினார். உடனே வள்ளிநாயகியைப் பார்த்து, "நான் குமரியாட வந்தேன் என்று நவின்றது உண்மையாகி விட்டது, இந்நீரைப் பருகியதும் என்னுடைய முதுமை மாறிவிட்டது. உன் மேல் வேட்கை மிகுதியாகிவிட்டது. என்னுடைய நீர் வேட்கையைப் போக்கிய நீ காமவேட்கையையும் போக்குவாயாக" என்று கூறிக் குறையிரந்தார். இதனைக் கேட்ட வள்ளியம்மை அஞ்சினாள். முதுமைக் கோல முருகனைப் பார்த்துச் சினங்கொண்டாள். "முதியவரே ! உமக்கு நல்லுணர்வு சற்றுமில்லை. இழிகுலத்தினளாகிய என்னை விரும்பினீர். பித்துக் கொண்டவரைப் போலப் பிதற்றுகிறீர். வேடர் குடிக்குப் பழியை உண்டாக்குகிறீர்" என்று கடிந்து பேசினாள். முதுமைக் கோல முருகரிடம் அகப்படாமலிருத்தற்கு அவ்விடம் விட்டு ஓடினாள். அச்சமயத்தில் அறுமுகப்பெருமான் ஆனைமுகப் பெருமானை வேண்ட அவர் துணைக்கு வந்து இருவரையும் ஒன்று படுத்தினார்.
தினைப்பயிர் முதிர்ந்து பயனை யளித்தது. வள்ளியம்மை தினைப்புனக் காவல் விடுத்து இல்லத்தை யடைந்தாள். முருகப் பிரானுடைய கூட்டுறவால் வேறுபட்டவளாய் விளங்கினாள். செவிலியுந் தாயும் மகளை உற்று நோக்கினர். "உனக்கு உடல் வேறாகியது. யாதோ தவறு நேரிட்டிருக்கிறது. இனிமேல்