Primary tabs
நான்முகன் நாரதரைப் பார்த்து, "இவ்வினாக்கட்கு விடையளிக்க நான் வல்லவன் அல்லன். சிவபெருமான்தாம் இவைகளின் உண்மையை உணருவார். அவரல்லாமல் அவருடைய நெற்றிக்கண்ணில் தோன்றிய முருகப்பெருமானும் அறிவர். இவர்கள் இருவரைத்தவிர மற்றையோர் அறியமாட்டார்கள். நீ தணிகைமலைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்குவாயாகில் உன்னுடைய ஐயங்கள் யாவும் அகலும்" என்று கூறினார். நாரதர் "கந்தமலை முதலிய பல மலைகள் இருக்கத் தணிகைமலையை ஏன் சிறப்பாகக் கூறினீர்?" என்று கேட்டார். நான்முகன் தணிகைமலையின் சிறப்புக்களையெல்லாம் நாரதருக்கு நவின்றார். நாரதர் தந்தையின் மொழிகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். தணிகைக்கு வந்து சிவக்குறி அமைத்து வழிபாடு செய்தார். அக்குறி நாரதலிங்கம் என்று பெயர் பெற்றது.
பிறகு மலைமேற் சென்று முருகக் கடவுளைப் போற்றி வணங்கித் தவஞ் செய்தார். முருகக் கடவுள் நாரதர் முன்பு தோன்றினார். "உனக்கு வேண்டியது யாது?" என்று உசாவினார். நாரதர் தம்முடைய இரண்டு ஐயங்களையும் முதலிற் சொன்னார். அதற்கு முருகக்கடவுள், "திருமால் முதலிய சிறந்த தேவர்களும் அழிந்துபோவதை அறிந்த அறக்கடவுள் தவஞ் செய்து காளையூர்தியாகி இறைவனைத் தாங்கும் அழியாத பேற்றைப் பெற்றது. இறந்தொழியும் திருமால் முதலிய தேவர்கள் அழிந்தொழிய அந் நீற்றைச் சிவபெருமான் அணிவதால் தாம் அழிவற்ற பரம்பொருள் என்பதை உலகிற்குணர்த்துகிறார்" என்று கூறி இரண்டு ஐயங்களையும் போக்கினார். மேலும் நாரதருக்கு ஏற்பட்டிருந்த ஐயங்களையெல்லாம் அகற்றினார். நாரதர் அறுமுகப்பெருமானை வணங்கி மனத்தெளிவடைந்தார்.
சூத முனிவர் கூறிய தணிகைச் சிறப்பினைக் கேட்ட தருப்பைக் காட்டு முனிவர்கள் மனமுருகி மகிழ்ச்சியுற்றுத் தணிகைமலைக்கு வந்து முருகப்பெருமானைத் தொழுது பேரின்பம் அடைந்தார்கள்.