Primary tabs
சேக்கிழாரின் பலதிற நலங்களையும், சிறப்புக்களையும் நன்கினிது தெளிந்துணர்ந்தவர். “ கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அல்லரோ ?” “பாம்பின் கால் பம்பன்றோ அறியும் ?”
சேக்கிழாரின் பலதிறச் சிறப்புக்களையும் ஆராய்ந்து தெளிந்து, வியந்து புகழ்ந்து விளக்கிப் பாடுதற்கு மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர் ஒருவரும் இரார் என்பது திண்ணம்.
அத்தகைய பெருங்கவிஞர் பாடிய இச் சிறந்த சேக்கிழார் பிள்ளைத் தமிழுக்குச் செந்தமிழ்ப் புலவர், சைவ சமய சிரோமணி, பேராசிரியர், வித்துவான், திரு.பாலூர் கண்ணப்ப முதலியார் எம்.ஏ., பி.ஒ.எல்., அவர்கள் மிகவும் விரிவாகப் பெரு விளக்கவுரை வரைந்து உதவியிருக்கின்றார்கள்.
இந்நூலின் முதற்கண் அமைந்துள்ள “பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி“ என்னும் பகுதி, நன்முறையில் சிறப்புற அமைந்துள்ளது. அங்ஙனமே ஏனைய பகுதிகளும் விரிவாகவும் விளக்கமாகவும், தெளிவுடனும் சுவை மிகவும் எழுதப்பெற்றிருக்கின்றன. ஏராளமான மேற்கோட்பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. படிப்பவர்களின் இலக்கிய அறிவு வளர்ச்சிக்கு அவைகள் பெரிதும் துணை செய்யும்
இந்நூலை எழுதியளித்த ஆசிரியர் அவர்களுக்கும், இதனை வெளியிட அன்புடன் முன் வந்து உதவிய திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் திருமடத்தின் தலைவர் சீலப் பெருந்திரு சிவப்பிரகாச அடிகளார் அவர்களுக்கும், சைவத் தமிழ் மக்களின் அன்பும் நன்றியும் என்றும் உரியன ஆகும்.
சென்னை,
25-2-’64
மா. சே. சாரங்கபாணி.