தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

குசேலன். தன்னுயிர் போல மன்னுயிரை மதித்தல், நன்மையே புரிதல், அடக்கம், பொறுமை,
அருள், நண்பு, அழுக்காறாமை, தவம் முதலிய நற்பண்பு நற்செயல், அவன்பாற்
குடிகொண்டன. காமம் வெகுளி மயக்கம், தீமை விளக்கும் கயவருறவு அவன்பாலணுகாது
நீங்கின. தூயவர்க்குந் தூயவனாய்த் துலங்கினான். மறை நான்கும் ஒதியுணர்ந்து பக்குவ
மறிந்து பலர்க்கும் கற்பிக்கும் குருவாகிய சாந்தீபமுனிவன் பால் அடைந்து பல கலை
பயின்றான். காயாம்பூ மேனிக் கண்ணனும் அந்நாளில் இக்குசேலனுடன் ஒருங்கிருந்து
கற்றவனே.

பல நூலுங் கற்றுயர்ந்த குசேலன் சாந்திராயணவிரத முதலிய விரதம் புரிந்தான்.
விரதத்தால் மேனியிளைத்துத் தோலும் என்பும் தோன்றும் யாக்கை ஆயினன். ஒவ்வொரு
நாளும் சூரியன் உதிக்குமுன் ஐந்து நாழிகைக்கே எழுவான். வைகறைக் கடன்களை
முடிப்பான். சந்தி வந்தனை நியமந்தவறாது புரிவான். மெய், வாய், கண், மூக்கு, செவி
என்னும் ஐம்பொறி புலன் ஒன்றுபட்டு உள்ளக்குறிப்பறிந்து நடக்குமாறு அவற்றையடக்கித்
தவவலிமையில் நின்றான். வீடும், காடும், ஓடும், பொன்னும் ஒன்றென மதித்து விருப்பு
வெறுப்பின்றியொழுகினன். கிழிந்த துணிகளைத் தைத்துப் பொருத்தி அதனையே
நல்லுடையாக உடுத்த காரணத்தால் வந்த பெயரே குசேலன் என்பது. பாற்கடல் மேல்
ஒரு கார்க்கடல் கிடப்பது போலப் பாம்பணைமேல் அறிதுயில் புரியும் திருமால்
பதத்தையே உள்ளத்திற் பதித்து ஒவ்வொரு நாளும் பூசனையியற்றிவரும் ஒழுக்கம்
தவறாது வாழ்ந்தான்.

குசேலன் தன் தவநெறி வாழ்க்கைக்குத் துணையாக ஒரு மங்கையை மணந்தான்.
அவள் பெயர் சுசீலை என்பது. அவள் குற்றமற்ற குலத்தில் உதித்தவள். விருந்தினர்க்கு
மகிழ்ந்து உணவூட்டும் அன்புடையவள். கொண்டான் குறிப்பறிந்தேவல் புரிபவள்.
சினஞ்சிறிதும் இல்லாள். கற்பு வலிமையுடையவள். கிடைத்ததையே யேற்று மகிழ்பவள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:55:55(இந்திய நேரம்)