Primary tabs
நூற்பயன்
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைவோர் குறைவிலா தவரே.
(பொ-ரை)
கொற்கை நகரதிபனும் குலத்திற்கு மகுடம் போன்றவனுமாகிய அதிவீர ராமபாண்டியன் கூறிய நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலைக் கற்றுக்குற்றத்தைப் போக்கிக் கொள்வோர் ஒரு குறையும் இல்லாதவராவர் (எ - று.)
நறுந்தொகை யென்பதற்கு நல்ல நீதிகளைத் தொகுத்திருப்பது என்பது பொருள். இதுவே இந்நூலின் பெயர். இச்செய்யுளின் முதலில் 'வெற்றிவேற்கை' என்னுந்தொடர் இருத்தலால், அதனாலும் இந்நூலை வழங்குவர். ஏ - ஈற்றசை.