தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thamizinbam


முதற்பதிப்பின் முன்னுரை
 

தமிழே  இன்பம், இன்பமே  தமிழ்.  கம்பன், சேக்கிழார்,  திருப்புகழ்,
அருட்பா போன்ற  நூல்களைப்  படித்தால்  இந்த  உண்மை விளங்கும்.
இவை  செய்யுள்கள்.  உரைநடையில்  தமிழின்பம் நுகர வேண்டுமானால்
திரு.வி.க,  சேதுப்பிள்ளை   ஆகிய   இரு  புலவர்களின்  செந்தமிழைச்
செவிமடுக்க  வேண்டும்.  “செந்தமிழுக்குச்  சேதுப்பிள்ளை”  என்றும்
சொல்லலாம்.  அவர் பேச்சு அளந்து தெளிந்து குளிர்ந்த அருவிப் பேச்சு.
அவர்   எப்பொருளை  எடுத்து  விளக்கினாலும்,  அது  மனத்திரையில்
சொல்லோவியமாக    நடமாடும்.  அவர்  எழுதிய  “வேலும்  வில்லும்”,
“ஊரும் பேரும்” முதலிய நூல்கள் தமிழின்பத் தேன் துளிகளாகும்.

மற்றொரு  நூல்  இதோ இருக்கின்றது! இதன் பெயரே “தமிழின்பம்” என்றால் இதை  இன்பத்துள் இன்பம் என்று சொல்ல வேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும்.    மேடைப்   பேச்சு   எப்படியிருக்க   வேண்டும்; கட்டுரைகள்    எப்படி    அமைய   வேண்டும்   என்பதை   இந்நூல் மாணவர்களுக்கு  நன்கு  விளக்கும்.  புறநானூறு,  சிலப்பதிகாரம்,  கந்த புராணம், திருக்குறள், கம்ப ராமாயணம், பெரியபுராணம் முதலிய பழைய நூல்களின்  சுவை  இக்கட்டுரைகளில் துளும்புகின்றது. கண்ணகிக் கூத்து, சேரனும்  கீரனும்,  அறிவும்  திருவும்,  தமிழும் சைவமும், ஆண்மையும் அருளும், கர்ணனும் கும்பகர்ணனும், காளத்தி வேடனும் கங்கை வேடனும் முதலிய   கட்டுரைகள்,   படிக்கப் படிக்கத்  தெவிட்டாது இனிக்கின்றன. தமிழர் படித்துப் படித்துப் பயன் பெறுக!
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:47:37(இந்திய நேரம்)