தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


திரிஞ்சநாள் போதுமையா

பல நாட்களாகக் காதலர்கள் சந்திப்பதற்கு இடையூறு ஏற்பட்டது. ஒரு நாள் வேலைக்குப் போகிறவழியில் அவள் அவனைக் கண்டு விட்டாள். அவள் தனது அன்பையும், பிரிவுத் துன்பத்தையும் விளக்கி அவனிடம் சொல்லுகிறாள். எத்தனை காவல் இருந்தாலும், குண்டு போட்டுச் சுட்டாலும் அத்தனையும் மீறிக்கொண்டு அவனிடம் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லுகிறாள். ஆனால் அவன் அவளை வெளியூருக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. நடுச் சாமத்தில் அவள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லுகிறான். ஆனால் அவளோ “திரிந்த நாள் போதும்” என்று ஒரே வார்த்தையில் சொல்லுகிறாள். இருந்து வாழ வழிபார்க்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் உணர்த்துகிறான் இப் பாடலில்.

காதலி :
நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே

குறுக்குச் சவளுதையா
கூந்த லொரு பாகத்துக்கு
சேக்குத் தலை சீவி
செந்துருக்குப் பொட்டு வச்சு
சோக்குப் போல நட நடந்தா-நான்
துரைகளுண்ணு மதிச் சிருவேன்

தேக்கம் பலகையில
தேனொழுகும் மெத்தையில
மன்னவர் கொடங்கையில
மத்தவர் அணைஞ்சிராம
நிறை பானைத் தண்ணிபோல
நிணலாடும் என் சதுரம்
குறை பானத் தண்ணி போல
குறை யுதனே ஒம்மாலே.

காவலிருந்தாலென்ன ?
கல்லு வெடி போட்டா லென்ன ?
இமுசு படுத்திட்டாலும்-நான்
எஜமானிடம் வந்திருவேன்
பச்ச மயங்குதனே
பவளக்காடு வாடுதனே-நான்
இச்ச பட்ட நேரமெல்லாம்
ஏங்கி முகம் வாடுதனே

காதலன்:
ஆத்துத் தண்ணி சேந்திருக்க
அமிர்த குணம் பாத்திருக்க
சேந்த கிளி இங்கிருக்க
தேச வழி போக வேண்டாம்
சட சடனு மழை பொழிய
சாமம் இடி விழுக
குடை போட்டு நானும் வாரேன்
குண மயிலே தூங்கிராத

காதலி:
ஆசை யெல்லாம் அவருமேலே
அவரு இங்க வரவேண்டாம்
தேசமோ தில்லு முல்லு-நம்ம
திரிஞ்ச நாள் போதுமையா
ஓடுத தண்ணியில
ஓட விட்டேன் பம்பரத்த
பம்பரத்த நம்பியல்லோ-நான்
வெம்பரப்பா ஆனேனே

குறிப்பு: பச்ச, பவளக்காடு-பெண் நலத்திற்கு உவமைகள்.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)