Primary tabs
இரும்பாய் உருக வேண்டாம்
காதலர்கள் சந்திக்கிறார்கள். தன்னுடைய பெற்றோர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பணக்காரனுக்கு தன்னைக் கட்டிக் கொடுக்கப் போவதாக காதலி சொல்லுகிறாள். பருவ காலத்தில் தானே பயிரிட வேண்டும். இல்லாவிட்டால் அறுவடைப் பருவம் தவறிவிடும். காதலித்தால் உரிய காலத்தில் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் என்று இலைமறை காயாக அவள் அவனுக்கு உணர்த்துகிறாள். அவளை நினைத்து உருகும் அவளுக்கு அவன் என்ன உறுதி சொல்லுவான் தூரக்காரனை கலியாணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லுகிறான். எப்படியாயினும் அவளுக்கு வாழ்வளிக்க அவன் உறுதி கொண்டு விட்டான்.
பாலத்திலே நான் நிக்க
மின்னுட்டான் பூச்சி போல
மின்ன வந்தால் ஆகாதோடி
அழகு திரு மேனிமேலே
சீவம் கிடக்குதையா-எங்கப்பனுக்கு
ஸ்ரீ ராமர் பச்சை மேலே
மானாமதுரையிலே
மரிக்கொழுந்து நாத்துப்பாவி
அறுக்கப் பருவம் தப்பி
இருப்பு இருந்து வாடுறனே!
காகிதம் எழுதையிலே
மாஞ்சோலை மசக்கத்திலே
மறந்திட்டேன் ரெண்டெழுத்தை
ஒரு நாள் பழக்கத்திலே
கட்டிச் சதுர மெல்லாம்
கயறாக உருகுதையா!
பதக்குழக்கு பூப்பூக்கும்
நீ வாடி சிவத்தக் குட்டி
உனக்கு ரெண்டு பூத்தாரேன்
பச்ச மாங்கா ஒண்ணு தாரேன்
பழுத்த மாங்கா ரெண்டு தாரேன்
கூந்தப் பனங்கா தாரேன்
கொண்டு வாடி சோத்துக் கட்டை
மஞ்சக் கிழங்கு தாரேன்
மலங்காட்டு நொங்கு தாரேன்
கொழும்பு ரூவா ஒண்ணு தாரேன்
கொண்டு வாடி சோத்துக் கட்டை
கரும்பு வெட்டையிலே
இருப்புக் கொள்ளுதில்லே-நான்
இரும்பா உருகிட்டேனே
இடுப்பிலே கையும் வேண்டாம்
துரும்பா உருக வேண்டாம்-நீ
தூரக்காரனுக்கு வாக்கப்பட வேண்டாம்
வட்டார வழக்கு: சீவம்-சீவன்; பச்சை-வயல் காடு; மசக்கம்-மயக்கம்; சதுரம்-சரீரம்; கயறாக-கயிறாக (பேச்சு); கொண்டுவாடி சோத்துக்கட்டை-அயலூர் போக ஏற்பாடு.
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம்,
திருநெல்வேலி மாவட்டம்.