தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 3 -

பொதுவாக உள்ளன; இலக்கணக் கூறுகள் பல பொதுவாக உள்ளன. வடமொழி (சமஸ்கிருதம்) படித்தவர்களின் செல்வாக்கு வளர்ந்து, வட சொற்களின் கலப்பு மிகுதியான காரணத்தால் கன்னடமும், தெலுங்கும் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மொழியிலிருந்து மிக வேறுபட்டுவிட்டன. மலையாளமும் தமிழும் அவ்வளவு மிகுதியாக வேறுபடவில்லை. கேரளத்தில் வடமொழியின் செல்வாக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் மிகுதியாயிற்று. அதற்குமுன் தமிழ் அங்கே ஆட்சி மொழியாகவும் கலைமொழியாகவும் இருந்து வந்தது. பதினைந்து நூற்றாண்டுகளுக்குமுன் ஆண்டு வந்த சேர மன்னர்கள் தமிழரசர்கள். அதற்குப் பிறகு பாண்டிய அரசு மரபைச் சார்ந்த தமிழ் அரசர்களே ‘பெருமான்கள்’ ‘பெருமாக்கன்மார்’ என்ற பெயரோடு அங்கே பத்தாம் நூற்றாண்டுவரையில் ஆண்டுவந்தார்கள். பழைய தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்டபோது. கேரளத்தைச் சார்ந்த திருவிதாங்கூர்த் தமிழ்ப்புலவர் ஒருவர் தலைவராக இருந்தார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுமுதல் கி.பி. முதல் நூற்றாண்டுவரையில் கேரள நாட்டுப் புலவர்கள் பலர் தமிழில் பாடியுள்ளனர். அவர்களின் பாடல்கள் பழைய தமிழ்த் தொகை நூல்களாகிய புறநானூறு அகநானூறு முதலியவற்றில் உள்ளன. புறநானூற்றில் கேரள நாட்டு (சேர நாட்டு) அரசர்களைப்பற்றிய பாடல்கள் பல இருக்கின்றன. பதிற்றுப்பத்து என்னும் தொகை நூலின் நூறு பாடல்களும் சேர நாட்டு (கேரள நாட்டு) அரசர்களைப் புகழ்ந்து பாடியவை. தமிழின் பழைய காவியமாகிய சிலப்பதிகாரம் கேரள நாட்டுத் தமிழ்ப் புலவர் இளங்கோ இயற்றியது. அந்தக் காப்பியத்தின் தலைவி கண்ணகிக்கு அந்த நாட்டில் திருவஞ்சைக்களத்தில் (திருவஞ்சிக்குளத்தில்) கோவில் கட்டப்பட்டது. கி.பி. ஏழு எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து பக்திப் பாடல்கள் பாடிய ஆழ்வார் நாயன்மார்களில் சேரமான் பெருமாள் நாயனாரும், குலசேகர ஆழ்வாரும் கேரள நாட்டைச் சார்ந்தவர்கள். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் இலக்கண நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார் கேரள நாட்டைச் சார்ந்தவர். இவ்வாறு பல நூற்றாண்டுகளாகக் கேரள நாடு சேர நாடு என்ற பெயருடன் தமிழ்நாட்டின் ஒரு பிரிவாக இருந்து தமிழ் வளர்த்து வந்தது. அதனால்தான் மற்றத் திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமையைவிட, தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒற்றுமை மிகுதியாக உள்ளது.

பிற நாட்டுத் தொடர்பு

திராவிட மொழிகளுக்குள் இடத்தால் பரப்பு உடைய மொழி தமிழ். நான்கு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டின் மொழியாக இருப்பதுடன்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:08:23(இந்திய நேரம்)