தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 28 -

 அவற்றில் சிலவற்றிற்கு எழுத்து வடிவம் தருவது உண்டு. அதற்குப் பிறகே புலவர்கள் எழுதும் இலக்கியம் ஒரு தனிவகையாக வளர்ச்சி பெறுவது வழக்கம். அவ்வாறே தமிழ்நாட்டிலும் சங்க இலக்கியத்தில் உள்ள பாட்டுகள் தோன்றுவதற்கு முன்னமே, அவற்றிற்கு அடிப்படையான வாய்மொழிப் பாடல்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே மக்களின் மகிழ்ச்சிக்காகப் பாடப்பட்டுவந்தன. அந்த வாய்மொழிப் பாடல்களின் மரபுகள், பின்னர்ப் புலவர்களால் இயற்றப்பட்ட பாட்டுகளில் படிந்துள்ளன. புலவர் பாட்டுகளின் மரபுகளை ஆராய்ந்து புலவர் சிலர் இலக்கண நூல்கள் இயற்றினார்கள். அவ்வாறு புலவர்களில் இலக்கியங்களும் இலக்கணங்களும் ஏற்பட்ட பிறகே, தொல்காப்பியனார் தோன்றித் தம்முடைய நூலை இயற்றினார். அவருடைய இலக்கண நூலுக்குப் பனம்பாரனார் என்பவர் பாயிரம் தந்துள்ளார். அதில் வடக்கே வேங்கடமலை (திருப்பதி) முதல் தெற்கே குமரிமுனை (கன்னியாகுமரி) வரையில் வழங்கியிருந்தது என்றும், மக்களின் பேச்சு வழக்கையும் புலவர்களின் செய்யுள் வழக்கையும் தொல்காப்பியனார் ஆராய்ந்தார் என்றும், அவர் காலத்துக்கு முன்பே இருந்த இலக்கண நூல்களையும் ஆராய்ந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியனாரும் தம் நூலில் தமக்கு முற்பட்ட இலக்கண ஆசிரியர்களின் விதிகளையும் கொள்கைகளையும்பற்றி அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழில் பல இலக்கியங்களும் இலக்கண நூல்களும் இருந்தன என்பது தெளிவாகிறது. சங்க இலக்கியம் என்னும் தொகுப்பில் உள்ள பாட்டுகளை ஆராயும்போதும், பழைய இலக்கிய மரபுகள் இருந்துவந்த உண்மை புலப்படுகிறது.

 தொகுப்பு

புலவர்கள் நாட்டின் மூலைமுடுக்குகளிலும் நகரங்களிலும் தோன்றி ஆங்காங்குப் பலவகைப் பாட்டுகளை இயற்றியிருந்தனர். அவை பல்லாயிரக்கணக்கில் புலவர்களின் வீடுகளிலும் அரண்மனைகளிலும் இருந்தன. நாட்டின் பல பகுதிகளிலும் சிதறுண்டு கிடந்த அவற்றில் பல, காலப்போக்கில் அழிந்தன. பனை ஓலையில் எழுதப்பட்டவை, சில தலைமுறைகளில் அழிந்துபோவது எளிது. அழிந்து மறைந்தவை போக, எஞ்சியிருந்த பாட்டுகளைக் காப்பது எவ்வாறு என்ற கவலை கி. பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. அப்போது புலவர் சிலரும் புரவலர் சிலரும், முன்வந்து அவற்றில் சிறந்தவற்றை மட்டுமாவது காப்பாற்ற முயன்றார்கள். அவர்களின் நல்ல முயற்சியினால் தொகுக்கப்பட்டவைகள் எட்டுத் தொகை என்னும் தனித்தனிப் பாட்டுகளின் தொகைநூல்கள் எட்டும், பத்துப்பாட்டு என்னும் நீண்ட பாட்டுகளின் தொகை நூல் ஒன்றும் ஆக ஒன்பது நூல்கள் ஆகும். அவைகளே சங்க இலக்கியம் என்று கூறப்படுவன.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:15:18(இந்திய நேரம்)