தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 90 -

புறப்படும்போது, “சிலம்புகள் உள்ளன” என்று கண்ணகி குறிப்பிடுவதைக் கேட்கிறோம். இரண்டாம் காண்டத்தில் மதுரையில் கோவலனுடைய வாழ்வின் கடைசி நாளில் அவன் அந்தச் சிலம்பில் ஒன்றை எடுத்துச் செல்வதையும் பொற்கொல்லன் அதைப் பார்ப்பதையும் காண்கிறோம். கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்தபின், கண்ணகி மற்றொரு சிலம்பைக் கையில் ஏந்திப் பாண்டியனிடம் செல்வதையும் முறையிடுவதையும் காண்கிறோம். இறுதியில், மூன்றாம் காண்டத்தில் கண்ணகி தெய்வமானபின், சேர அரசனுடைய கண்ணுக்குத் தோன்றும் காட்சியில் அந்தப் பொன்சிலம்பைக் காண்கிறோம். இந்த அளவில் சிலம்பைக் காட்டிக் காப்பியத்தை அழகுபடுத்திப் பெயர் சூட்டியுள்ளளார் ஆசிரியர்.

கலையுள்ளம்

இளங்கோவடிகள் அரச குடும்ப வாழ்வை அறிந்தவர்; துறவறத்தில் நின்றவர். அறநெறியை வற்புறுத்துவதில் ஆர்வம் மிக்கவர்; தாம் சைனராயினும் சமயப் பொதுநோக்கு வாய்ந்தவர். தாம் சேரநாட்டார் ஆயினும் சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றையும் இணைத்துத் தமிழ்நாடு என நோக்கும் ஒருமை நோக்கம் உடையவர். இவைபோலவே, அவருக்கு உள்ள மற்றொரு சிறப்பு, அவருடைய கலையுள்ளம் ஆகும். அவருடைய காப்பியத்தில் நாட்டியம், இசை ஆகிய இரு கலைகளையும்பற்றி மிக விரிவாக எடுத்துரைத்த காரணத்தால்மட்டும் அவருடைய கலையுள்ளம் விளங்கவில்லை; காப்பியத்தில் வருணனைகளையும் உணர்ச்சிகளையும் இணை இணையாகவும் முரணாகவும் நயமுற அமைத்துள்ள அமைப்பும் அவருடைய கலையுள்ளத்தைத் தெளிவாக விளக்குகின்றன.

கண்ணகியும் கோவலனும் தொடக்கத்தில் நடத்தும் இன்ப வாழ்க்கையின்போது தென்றலும் வண்டும் வருணிக்கப்படுகின்றன. கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்தபின், மறுபடியும் தென்றலும் வண்டும் வருணிக்கப்படுகின்றன. அங்கு வருணனை வேறுபடுகின்றது. அதன் பயனும் வேறாக உள்ளது. அந்தப் பிரிவின் போது, மகளிர் இரு சாராரின் கண்களில் இருவகைக் கண்ணீரைக் காட்டுகிறார். கோவலனோடு மகிழும் மாதவியின் கண்களிலும் கணவரைப் பிரியாத மற்ற மகளிரின் கண்களிலும் இன்பக் கண்ணீரையும், கண்ணகியின் கண்களிலும் கணவரைப் பிரிந்த மற்ற மகளிரின் கண்களிலும் துன்பக் கண்ணீரையும் முரண்படக் காட்டுகிறார். கோவலனுக்குத் திருமணமான பிறகு நிலா முற்றத்தில் கண்ணகியோடு இன்பமாக வாழும்போது குளிர்ந்த நிலவைக் காண்கிறோம். பிறகு இருவரும் மதுரைக்குச் செல்லும்போது கடுங்கோடையில் அவர்களின் துன்பத்தைத் தணிக்க முயலும் நிலவைக் காண்கிறோம். கோவலன் கண்ணகியை புகழும் பாராட்டு மொழிகளை இரண்டு இடங்களில் கேட்கிறோம். திருமணத்திற்குப்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:32:34(இந்திய நேரம்)