Primary tabs
“தான் நிலையானவன் என்று எண்ணித் தன்னை ஒப்பற்றவனாகக் கருதிக் கொண்டு தன் செல்வத்தைப் பெரிய வளமாக மதிக்கின்ற இந்த மனிதப் பிறவியைப் பாடிப் பயன் என்ன?” “மிகமிக நல்ல உயர்ந்த கவிதைகள்கொண்டு, புலவர்களே, ஒரு மானிடப் பிறவியைப் பாடுவதால் என்ன பயன் ஆகும்? என்ன ஆகும்? எத்தனை நாளைக்கு அவன் உதவிபோதும், புலவர்களே?” “அதைக் கொள்வதால் பயன் இல்லை. குப்பை எழுந்து விளங்குவது போன்றது அந்தச் செல்வம்! அதைப் புகழ்ந்து உங்கள் உண்மையை இழந்துவீடாதீர்கள், புலவர்களே!” “உங்கள் உடம்பை உழைக்கச் செய்து தொழில் செய்து பிழைக்கலாமே! இந்த உலகில் உங்கள் பாட்டுக்கு ஏற்ற செல்வர் இல்லை என்பதைப் பார்த்துவிட்டோம். உங்கள் இனிய கவிகள் கொண்டு உங்கள் இட்டா தெய்வத்தைப் புகழ்ந்து பாடுங்கள். அவை என் திருமாலுக்குச் சேர்த்துவிடும்.” “மழை போன்ற கை, மலை போன்ற தோள் என்று பயனற்ற மனிதரைப் பாடிப் பச்சைப் பொய் சொல்ல வேண்டா.” “என்னுடைய வாயைக் கொண்டு மனிதரைப் பாடுவதற்காக வந்த கவி அல்ல நான்.” இவ்வாறு ஒரு பதிகம் முழுதும் செல்வரைப் பொய்யாகப் புகழ்ந்து பாடும் பொய்ம்மையை வெறுத்துக் கூறியுள்ளார்.
நாயன்மார்களுள் சுந்தரமூர்த்தி நாயனாரும் இதே கருத்தை எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாறு பலவகையிலும் நாட்டில் எழுச்சியையும் புது நம்பிக்கையையும் விளைத்தவை ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்கள்.
பாடல்களில் திருப்பமும் நெகிழ்ச்சியும்
இடையில் தோன்றிய சில நீதி நூல்களை ஒதுக்கிவிட்டுப் பார்ப்போமானால் சங்க இலக்கியம் பக்தி இலக்கியமாக மாறி வளர்ந்த வளர்ச்சியில் உள்ள சிறப்பை நன்கு உணரலாம். பெயர் குறிப்பிடப்படாமையால் இன்னார் என்று உணரப்படாத கற்பனை மனிதர் இருவரின் காதலாக இருந்த பாட்டுகள் மாறி, தெய்வத்தின்மீது கொண்ட காதலைப் பாடும் பாட்டுகளாக வளர்ந்தன. அரசர்களின் வீரச் செயல்களைப் பாடும் நிலை மாறி, கடவுளின் அற்புத விளையாட்டுகளைப் பாடும் நிலை வளர்ந்தது. வள்ளல்களின் கொடையைப் பாடும் பாடல்களுக்கு ஈடாக, கடவுளின் அருட் செயல்களைப் பாடும் பாடல்கள் வளர்ந்தன. கற்பனைக்