Primary tabs
கலிங்கத்துப் பரணி எனப்பட்டது. நூலின் ஆசிரியர் செயங்கொண்டார். பரணி என்னும் இலக்கிய வகையில் அவருடைய நூலே இன்றுவரையில் சிறப்புடையதாய் விளங்குகிறது. வீரச்சுவைக்கு உரிய போர்ச் செய்திகளை எடுத்துரைக்கும் நூலாயினும், புலவருடைய கற்பனைத் திறனால் காதல் சுவைக்கு மிக்கு விளங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இரண்டு அடிகளால் ஆன தாழிசை என்னும் செய்யுள் வகையால் நூல் இயற்றப்பட்டது. செய்யுள்கள் வீரச்சுவைக்கு ஏற்ற மிடுக்கான ஓசைச் செல்வம் உடையவை; போர் நிகழ்ச்சிகளின் வேகத்திற்கும் கொடுமைக்கும் மற்ற உணர்ச்சிகளுக்கு ஏற்றவை. ஓசைகளை வேறுபடுத்திக் காட்டுவதில் வல்லவர் புலவர். சொற்களின் ஓசையும் பொருளும் சேர்ந்து போர்க்களத்தையே படிப்பவரின் மனக்கண்ணின் எதிரே நிறுத்திவிடுகின்றன. பல பாடல்கள் பொருளையும் மறந்து ஓசைச் சிறப்புக்காகவே பலமுறை படிக்கத் தூண்டுவனவாக உள்ளன.
இவ்வாறே நூற்றுக்கணக்கான செய்யுள்கள் விரைவும் மிடுக்கும் உடையனவாய் உணர்ச்சி வேகத்திற்கு ஏற்றவாறு ஒலிக்கின்றன.
போர்க்களத்தில் வீரர்கள் வழிபடும் தெய்வம் காளி. காளியைச் சுற்றியுள்ள கூட்டம் பேய்களின் கூட்டம். காளிக்கு உரிய நட்சத்திரம் பரணி. அதனால் நூலுக்குப் பரணி என்று பெயர் அமைந்தது என்று கூறுவர். பல ஆண்டுகளாக எங்கும் போர்கள் இல்லாமையால், பேய்களுக்கு உணவான பிணங்கள் கிடைக்காமல் அவை பசியால் வாடுவதாகக் கற்பனை செய்யப்படுகின்றது. பேய்கள் தம் தெய்வமாகிய காளியிடம் சென்று நிலைமையை முறையிடுகின்றன. கலிங்கநாட்டில் சோழன்படை புறப்பட்டுச் செல்வதாகச் செய்தி வருகிறது. அவ்வாறு அமைத்தே போர்க்கள வருணனை தொடங்குகிறது. போர் முடிந்த பிறகு பகைநாட்டு வீரர்களும் யானைகளும் கொன்று குவிக்கப்பட்டிருக்கும் காட்சி விளக்கப்படுகிறது. பேய்களின் விருந்தும் கொண்டாட்டமும் எடுத்துரைக்கப்படுகின்றன வென்ற அரசனுடைய புகழ் பலமுறை பாராட்டிப் பேசப்படுகின்றது இத்தகைய கற்பனை அமைத்துப் பாடுவதே பரணி இலக்கியத்திற்கு உரிய இலக்கணம் ஆகிவிட்டது.