தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 153 -

பெருங்கதை

பெருங்கதை ஒரு சைன காப்பியம்; பிருகத்கதா என்னும் பைசாசமொழி நூலை ஒட்டித் தமிழில் இயற்றப்பட்டது என்று கூறப்படும்.  அதை மறுத்து, ‘பிருகத்கதாமஞ்சரி’, ‘கதா சரித்சாகரம்’ என்னும் வடமொழி நூல்களை ஒட்டி இயற்றப்பட்டது என்று வேறு சிலர் கூறுவர். இதைத் தமிழில் இயற்றிய புலவர் கொங்கு நாட்டைச் சார்ந்த சிற்றரசர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்; அதனால் கொங்குவேளிர் என்று குறிக்கப்படுகிறார்.

வத்தநாட்டுக் கௌசாம்பி நகரத்து அரசனாகிய உதயணன் என்பவனுடைய வரலாற்றை ஐந்து காண்டங்களில் விரிவாகக் கூறும் நூல் இது.  இதே அரசனுடைய வரலாற்றைக் கூறும் மற்றொரு நூலும் தமிழில் உள்ளது. அது உதயணகுமார காவியம் என்பது; ஆனால் அது அவ்வளவாகப் போற்றப்படுவதில்லை; இலக்கியச் சுவை குறைந்திருப்பதே அதற்குக் காரணம். பெருங்கதையில் சுவையான வருணனைகள் பல உள்ளன.  சங்க காலத்தில் செல்வாக்காக இருந்த அகவல் என்ற செய்யுள் வகையால் இயற்றப்பட்ட பெரிய நூல்களுள் பெருங்கதையும் ஒன்று ஆகும். பெருங்கதையுள் சைனசமயக் கொள்கைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.  கதைச் சுவை குன்றாத வகையில் அக்கொள்கைகளை ஆசிரியர் இடையிடையே விளக்கியிருக்கும் திறம் போற்றத்தக்கது. இந்த நூலின் முதலில் ஒரு பகுதியும் இறுதியில் சிறு பகுதியும் மறைந்துபோயின.

சீவகசிந்தாமணி

இதுவரையில் பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டுவந்த தமிழிலக்கிய வரலாற்றில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு புதுமையைப் புகுத்தியவர் திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவர். அவர் சீவகன் என்ற அரசனுடைய வரலாற்றை ஒரு காப்பியமாகப் பாடியபோது, விருத்தம் என்ற புதுச் செய்யுள்வகையைப் பயன்படுத்தினார். சிலப்பதிகாரம் முதலிய நூல்களுள் விருத்தம் என்ற செய்யுளின் தோற்றம் ஒருவாறு காணப்படுவது உண்மையே. ஆயினும் அதை நன்கு பயன்படுத்திய புலவர் திருத்தக்கதேவரே. மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாட்டுகள் கொண்ட ஒரு பெரிய காப்பியத்தை அந்தப் புதிய செய்யுள் வகையாலேயே முழுதும் பாடி முடித்தார். விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது; முதல் அடியில் எத்தனை சீர்வருமோ அத்தனை சீர்களே மற்ற மூன்று அடிகளிலும் வரும்.  முதல் அடியில் அமைந்த சீர்களின் அமைப்பே அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும்.  அதனால் முதலடியின் ஓசையே மற்ற மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஓர் அடிக்கு இத்தனை சீர்கள் வரவேண்டும், இன்ன அளவான சீர்கள் வரவேண்டும் என்ற




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:50:16(இந்திய நேரம்)