தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 159 -

செய்ததற்குத் தக்க காரணங்கள் இல்லை. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி ஆகிய ஐந்தையும் ஐம்பெருங்காப்பியம் என்றனர். உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஐந்தனையும் ஐஞ்சிறுகாப்பியம் என்றனர். சிந்தாமணியோடு ஒத்த இடம்பெறத் தகுதியான சூளாமணியைச் சிறுகாப்பியம் என்று அமைத்தது பொருந்தவில்லை. சமய வாதம் மிகுந்த குண்டலகேசியைப் பெருங்காப்பியத்துள் சேர்த்ததும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பிற்காலத்து அறிஞர் எவரோ செய்த இந்தப் பாகுபாடு புறக்கணிக்கத் தக்கதே எனலாம்.

சோழரும் சைவ நூல்களும்

கி. பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்ற சோழர் ஆட்சி தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்தது. அப்போது ஆட்சிபுரிந்த சோழ அரசர்கள் தமிழ்ப்புலவர்களின் நட்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களாக விளங்கினார்கள். அவர்களுள் சிலர் இலக்கியம் கற்றறிந்த மன்னர்களாகவும் இருந்தார்கள். பெரிய புராண ஆசிரியரான சேக்கிழாரிடத்துக் குலோத்துங்க சோழன் பக்தி கொண்டிருந்தான். இராமாயணம் இயற்றிய கம்பரிடம் நட்புப் பூண்டிருந்தான் சோழன் ஒருவன். கவிச்சக்கரவர்த்தி என்ற பெருமிதப் பட்டத்தோடு விளங்கிய புலவர் ஒட்டக்கூத்தர், சோழ அரசவைப் புலவர். சோழரின் ஆட்சியின் பெருமை தென்கோடி முதல் வடகோடி வரையில் எட்டிக் கடல்கடந்த நாடுகளிலும் தீவுகளிலும் பரவியிருந்தது. சோழநாடு பல நாடுகளை வென்று பேரரசாகத் திகழ்ந்தது. வானளாவிய கோபுரங்களுடன் பெரிய கோயில்கள் கட்டப்பட்டன. தமிழ் நாட்டின் வரலாற்றில் காணாத பல பெருஞ்செயல்களை அந்த அரசர்கள் நிறைவேற்றினார்கள். தமிழிலக்கிய வளர்ச்சியும் அந்தப் பெருமைகளுக்கு ஏற்ற அளவு உயர்வுபெற்று நின்றது காணலாம்.

சைவ சமய இலக்கியம் காக்கப்பட்டு வளர்வதற்குச் சோழர்களின் ஆதரவு பெருங்காரணம் எனலாம். திருவிசைப்பா என்னும் தொகுதியில் உள்ள சில பாடல்களின் ஆசிரியரான கண்டராதித்தர் சோழர் குடும்பத்தைச் சார்ந்தவர். கோயில்களில் முறையாக தேவாரப் பாடல்களைப் பாடுவதற்காக இசைதேர்ந்த பக்தர்களை ஏற்படுத்தி அவர்களுக்குத் தக்க மானியங்களை வழங்கினார்கள் சோழ அரசர்கள். இன்றும் பல கோயில் கல்வெட்டுகளில் அந்த மானியங்களைப்பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

இராசராசசோழன் காலத்தில் திருமாளிகைத்தேவர் கருவூர்த் தேவர் முதலிய சிவனடியார் ஒன்பதின்மர் பாடிய பாடல்கள் திருவிசைப்பா என்ற




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:51:57(இந்திய நேரம்)