தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 168 -

ஆதரித்து வளர்த்த வள்ளல் சடையப்பரை என்றும் மறவாமல் போற்றினார் கம்பர். தாம் இயற்றிய இராமாயணத்துள் ஆயிரம் பாட்டுக்கு ஒருமுறை சடையப்பரின் புகழையும் பண்பையும் பெருமையையும் உவமையாக அமைத்துப் பாடியுள்ளார். இராமன் இராவணனை வென்று நாட்டுக்குத் திரும்பி முடிசூட்டிக்கொண்ட விழாவை வருணித்த கம்பர், வசிட்ட முனிவர் இராமனுக்கு முடிசூட்டினார் என்ற அளவில் கூறி நிற்கவில்லை. உழுது விளைத்து நாட்டைக் காக்கும் உழவர் பெருமக்களாகிய குடிகள் தொழுது முடியை எடுத்துத் தர, அதை அவர்களிடமிருந்து வாங்கி வசிட்டன் சூட்டினான் என்று விளக்கப் புகுந்து, வெண்ணெய்நல்லூரின் வள்ளல் சடையப்பனின் மரபினராகிய உழவர் குடும்பத்தார் முடியை எடுத்துக் கொடுக்க வசிட்டன் வாங்கிச் சூட்டினான் என்று புகழ்ந்தார். இவ்வாறு அவர் தம் நன்றியறிதலைப் புலப்படுத்தியுள்ளார்.

கம்பருடைய காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டு எனச் சிலரும் பன்னிரண்டாம் நூற்றாண்டு எனப் பலரும் கூறுவர். சோழன் குலோத்துங்கனிடம் அவர் பெற்றிருத்த மதிப்பைவிட மக்களிடம் அவர் பெற்றிருந்த மதிப்புப் பெரிது. தம் கலையாற்றலில் பெருநம்பிக்கை கொண்டிருந்த அவருடைய நெஞ்சம், நாட்டை ஆளும் ஒரு மன்னனின் விருப்புவெறுப்புகளுக்குக் கட்டுப்பட்டு அடங்கிச் செல்ல முடியவில்லை. அதனால் அரசனோடு கருத்து வேறுபாடு கொள்ள நேர்ந்தபோது, ‘உன்னை அன்றிக் கவிஞர்க்கு வேறு இடமே இல்லையோ’ என்று சினந்து கூறி அரசவையைவிட்டு வெளியேறியதாகக் கதை கூறும். கம்பர்க்கு அம்பிகாபதி என்ற பெயரால் ஒரு அருமை மகன் இருந்தார். அம்பிகாபதியும் பெரிய கவிஞர் ஆனார். அரசன் மகளுக்கும் அம்பிகாபதிக்கும் காதல் ஏற்பட்டது. அரசன் அதை தடுக்க முயன்றான். அரசன் கம்பர்மேல் அதன் காரணமாகவும் காழ்ப்புக்கொண்டான். அம்பிகாபதியின் வாழ்வு முடிந்தபோது மகனை இழந்த கம்பர் பெருந்துயர் உற்றார். அவர் இயற்றிய இராமயணத்தில், மகன் இராமன் காட்டிற்குப் பிரிய நேர்ந்தபோது தசரதன் உற்ற துயரத்திலும், இந்திரசித்துக்காக அவன் தந்தை இராவணன் அடைந்த துயரத்திலும் கம்பருடைய துயரம் புலப்படுகிறது என்று கூறுவர். அம்பிகாபதிக் கோவை என்ற காதல்நூல் கம்பர் மகனால் இயற்றப்பட்டது என்பர். மகனை இழந்த துயரத்தால் வாடிய கம்பர் சோழநாட்டைவிட்டுப் பாண்டி நாட்டில் நாட்டரசன்கோட்டைக்குச் சென்று காலமானார் என்று சொல்லப்படுகிறது. அங்கே அவருடைய சமாதி கோயிலாகப் போற்றப்படுகிறது.

கம்பர்க்கும் அவ்வையார்க்கும் தொடர்பு கற்பித்துக் கூறும் கதைகள் உண்டு; பாட்டுகளும் சில உண்டு.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:54:28(இந்திய நேரம்)