தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 171 -

கங்கையாற்றைக் கடந்த பிறகு, காட்டிற்கு இராமனுடன் வருவதாகக் கூறினான். அப்போது இராமன் குகனைப் பார்த்து, “நீ என் உயிர் போன்றவன். என் தம்பி உன் தம்பி. இவள் உன் உறவு. இந்த என் நாடெல்லாம் உன்னுடையது. நான் உன் தொழிலை உரிமையாக உடையவன். உன் மற்றொரு தம்பியாகிய பரதன் அங்கே அயோத்தியில் உள்ள சுற்றத்தாரைக் காப்பாற்றுவதற்காக அமைந்திருக்கிறான். இங்கே உள்ள சுற்றத்தாரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? சொல். உன் சுற்றம் என் சுற்றம் அல்லவா? அவர்கள் துயர் அடையலாமோ? இது என் சுற்றம். இவர்களைக் காப்பாற்றிக்கொண்டு நீ இங்கேயே இரு. இது என் ஏவல்” என்றான். இவ்வாறு குகனைத் தம்பி என்று முறை கொண்டாடியது ஒரு முறை பேசிய உபசாரப் பேச்சு அல்ல; அதுவே கம்பருடைய காப்பியத்தில் நிலைபெற்றுவிட்டது. பரதன் இராமனைத் தேடிக் காட்டிற்கு வந்தபோது, குகனைக் கண்டு, அவனைக் கோசலைக்கு அறிமுகப்படுத்தியபோது, “இவன் இராமனுடைய இனிய தம்பி. இலக்குமணனுக்கும் சத்ருக்னனுக்கும் எனக்கும் அண்ணன்” என்றான். அதைக் கேட்ட கோசலை, “மைந்தர்காள்! இனித் துயரப்பட்டு வருந்தாதீர்கள். நாட்டைவிட்டுக் காட்டை நோக்கி இராமனும் இலக்குவனும் வந்ததும் நன்மையே ஆயிற்று அல்லவா? இந்தக் குகனோடு சேர்ந்து நீங்கள் ஐந்துபேரும் இந்த நாட்டை நெடுங்காலம் ஆட்சி புரிவீர்களாக” என்று வாழ்த்தினாளாம். பரதன் கைகேயியை அறிமுகப்படுத்தியபோது, குகன் அவளைத் தாய் என்று வணங்கினானாம்.

இராமன் சுக்கிரீவனிடம் அன்பு கொண்டதும், “உன் பகைவர் எனக்குப் பகைவர். தீயவர்களே ஆனாலும் உன் நண்பர் எனக்கு நண்பர். உன் சுற்றத்தார் எனக்குச் சுற்றத்தார். என் உறவினர் உனக்கும் உறவினரே. நீ என் உயிர்த்துணைவனான தம்பி” என்றான். பிறகு விபீஷணனிடம் அன்புகொண்டபோது, “முன்பு குகனோடு சேர்ந்து ஐந்து பிள்ளைகள் ஆனோம். பிறகு சுக்கிரீவனோடு சேர்ந்து ஆறுபேர் ஆனோம். என்னிடம் அன்போடு வந்து சேர்ந்த உன்னோடு சேர்ந்து ஏழுபேர் ஆனோம். உன் தந்தையாகிய தசரதன் இவ்வாறு காட்டுக்கு அனுப்பி, பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டான்” என்றான்.

குகனொடும் ஐவர் ஆனேம்
முன்புபின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்
எம்முறை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய
நின்னொடும் எழுவர் ஆனேம்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:55:20(இந்திய நேரம்)