Primary tabs
அவ்வையார்
அவ்வையார் என்னும் புலவரின் பெயர் தமிழ்நாட்டில் படித்தவர் படிக்காதவர் எல்லோரும் அறிந்து பாராட்டும் பெயர் ஆகும். தாய் போன்ற மூத்த பெண்மணி என்னும் பொருள் உடைய அந்தச் சொல், தமிழ்ப் பெண்பாற் புலவர்களுள் சிலரைக் குறிக்க வழங்கியது. சங்க காலப் புலவர்களுள் பெண் புலவர்கள் முப்பதுபேர் இருந்தார்கள். அவர்களுள் அவ்வையார் என்பவர் ஒருவர். பாரி, அதியமான் என்னும் தலைவர்களோடும் சேரசோழபாண்டியரோடும் பழகியவர். அதியமான் என்னும் தகடூர் அரசனுடன் நெருங்கிய நட்புப் பூண்டிருந்தார். ஒரு முறை அவனுக்கும் தொண்டைமான் என்ற அரசனுக்கும் பகை மூண்டபோது, அவ்வையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்று போரைத் தடுக்க முயன்றார். அவ்வையார் அப்போதே வயது முதிர்ந்தவராக இருந்தார். அதனால் ஆயுள் நீட்டிப்புக்காகத் தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல், அதியமான் அவ்வையார்க்குக் கொடுத்து அவர் உண்ணுமாறு செய்தான். அவனுடைய அன்பு முதிர்ந்த செயலைப் பாராட்டி அவ்வையார் பாடிய பாட்டு, புகழ் மிக்க பாடலாகும். புறநானூற்றிலும் மற்றத் தொகை நூல்களிலும் உள்ள அவ்வையாரின் பாட்டுகள் 59. அவை அவருடைய புலமைத் திறத்தைமட்டும் அல்லாமல், உலகியல் அறிவையும் வாழ்க்கை அனுபவத்தையும் நன்றாக எடுத்துக்காட்டுகின்றன.
சங்க காலத்துப் புலவராகிய அந்த அவ்வையார்க்கு அடுத்தாற்போல், நாயன்மாரின் காலத்தில் அவ்வையார் ஒருவர் சிவபக்தி உடையவராக வாழ்ந்ததாகக் கூறும் கதை உண்டு.
கம்பர் ஒட்டக்கூத்தர் முதலானவர்களின் காலத்தில் வாழ்ந்த அவ்வையார் ஒருவர், தமிழரின் நெஞ்சில் கிழப்பாட்டியாகப் போற்றப்படுகிறார். இவரே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்றவர். சங்ககாலத்து அவ்வையார் நாட்டை ஆண்ட தலைவர்களின் அவைக்களத்தில்மட்டும் விளங்கியவர். இந்த அவ்வையார் சோழ அரசனுடைய அவைக்களத்திலும் விளங்கினார். சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் பழகினார்; அந்த அளவில் நிற்காமல், ஊர்ஊராகச் சென்று, சிற்றூர்களில் சிறு குடிசைகளில் வாழ்ந்த உழவர்களோடும் பழகி, அவர்கள் அன்போடு தந்த கூழையும் குடித்துப் பாடினார். ஏழை உழைப்பாளிக் குடும்பங்களோடு ஒன்றி அன்போடு வாழ்ந்த அந்தப் புலவரைக் கூழுக்குப் பாடியவர் என்று இன்றுவரை பாராட்டி வருகிறார்கள். அவர் சிறுபிள்ளைகளின் வாழ்விலும் இன்பம் கண்டவர். சிறுவர்களுக்காக அவர் இயற்றிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் நூல்கள் இன்றும்