Primary tabs
என்பது 328 செய்யுள்கொண்ட விரிவான நூல். அவருடைய இருபா இருபஃது என்பதும் சைவர்களால் போற்றப்படும் ஒரு சாத்திரம். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம் என்னும் சிறப்பான நூலின் ஆசிரியர். அவர் ஏழு சாத்திர நூல்களும், இரண்டு புராணங்களும், வேறு சில நூல்களும் இயற்றியுள்ளார். சேக்கிழாரின் வரலாறு கூறும் சேக்கிழார் புராணத்தை இயற்றியவர் அவரே. மனவாசகம் கடந்தார் என்பவர் இயற்றிய உண்மை விளக்கம் என்பதும் ஒரு நல்ல சாத்திர நூல்.
தஞ்சைவாணன் கோவை
இக்காலத்தில் தஞ்சைவாணன் கோவை என்பதை இயற்றியவர் பொய்யாமொழியார் என்னும் புலவர். அதில் உள்ள நானூறு செய்யுள்களும் கற்பனைக் காதலர் இருவரின் காதல் வளர்ச்சியைப் படிப்படியாகக் கதைபோல எடுத்துக்கூறும் கோவை என்னும் இலக்கிய வகை ஆகும். நானூறும் தஞ்சாவூரில் ஆண்ட ஒரு சிற்றரசனைப் புகழும் குறிப்புகள் உடையவை.
காதலியின் வாழ்க்கையில் அவளுக்கும் காதலனுக்கும் உறவு ஏற்பட்டது என்ற உண்மை அறியாமல் பெற்றோர்கள் இருந்தனர். அப்போது தம் மகளின் உடலில் ஏற்பட்ட வாட்டத்தையும் மெலிவையும் ஏதோ நோய் என்று தவறாக உணர்ந்து, அதற்கு வேறு பரிகாரங்களைத் தேடத் தொடங்கினார்கள். ஆனால் அவளோடு நெருங்கிப் பழகிய தோழிக்கு உண்மை தெரியும். தக்க வாய்ப்பு நேரும்போது பெற்றோருக்கு அறிவிக்கவேண்டும் என்று தோழி காத்திருந்தாள். வாய்ப்பு நேர்ந்தவுடன், உண்மையை எடுத்துக் கூறுகிறாள். “ஒருநாள் இவளுடன் நாங்கள் சோலையில் பொழுது போக்கிக்கொண்டிருந்தபோது, மதம் பிடித்த யானை ஒன்று ஓடி வந்தது. நாங்கள் ஓடினோம்; அது எங்களைத் துரத்தி வந்தது. அஞ்சி அலறினோம். அப்போது எங்கிருந்தோ வீரன் ஒருவன் அங்கே தோன்றி, இவளைத் தன் இடப்பக்கத்தில் பற்றிக்கொண்டு, அந்த யானைமேல் தன்வேலை எறிந்து தடுத்தான். வேல் பட்ட இடத்திலிருந்து வந்த இரத்தம் அந்த வீரனின் மார்பில் ஒழுகி ஒரு பகுதியைச் செந்நிறம் ஆக்கியது. அவனுடைய இடது தோளின்மேல் சாய்ந்துகிடந்த உங்கள் மகளின் கண்களிலிருந்து வந்த கண்ணீர் கண்களில் தீட்டிய மையுடன் கலந்து கருநிறமாய் ஒழுகி வீரனுடைய மார்பின் இடப்பகுதியைக் கருநிறமாக்கியது. அப்போது அந்த வீரன் எப்படித் தோன்றினான், தெரியுமா? உமா தேவியை இடப்பக்கத்தில் கொண்ட சிவபெருமான்போலவே தோன்றினான்” என்று சொல்லிப் பெற்றோர்க்கு உண்மை விளங்க வைத்தாள்.