Primary tabs
வடமொழிப் புலமையும் நிரம்பியவர் அவர். நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியரும் வடமொழி கற்றவர். அவர் தமிழ் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் செய்த தொண்டு பெரிது. தமிழில் பல நூல்களுக்கு உரை எழுதிய பெருமை அவரையே சாரும். பாடல்களுக்கு நேரே உரை கொள்ளாமல் அந்வயப்படுத்திப் பொருந்தாத வகையில் சொற்களை எங்கெங்கோ கொண்டு சேர்த்துப் பொருள்கொள்ளும் செயற்கை முறை அவரிடம் உள்ள குறை ஆகும். ஆயினும் அவருடைய அறிவும் திறனும் போற்றத்தக்கவாறு அவர் எழுதிய உரைகளில் விளங்குகின்றன. அவருடைய உரைநடை பெருமிதமும் அழகும் கூடியது. இந்த உரையாசிரியர்களின் உரைகளில் அங்கங்கே காட்டும் மேற்கோள்கள் பல பழைய நூல்களிலிருந்து அமைந்தவை. அவற்றால், மறைந்துபோன பல நூல்களைப்பற்றி ஒரு சிறிதாவது அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்குநல்லார் எழுதிய உரையால், பழங்காலத்து இசைநூல்கள் நாடக நூல்கள் பலவற்றின் பெயர்களை அறிகிறோம். அந்த உரையால் பழந் தமிழ்நாட்டுக் கலைகளைப்பற்றி எவ்வளவோ அறிய முடிகிறது. முழுதும் தெளிவாக அறிய முடியாவிட்டாலும், கலை வரலாறுபற்றிய இருள் ஓரளவு விலகுகிறது என்று கூறலாம். அவர்க்கு முன்பே சிலப்பதிகாரத்துக்கு அமைந்த பழைய உரையும் ஒன்று உண்டு. இரண்டு உரைகளின் நடையும் செம்மையானவை; எதுகை மோனைகளும் சீர்களின் அடுக்குகளும் குறைந்தவை; கருத்துகளைத் தெளிவாக விளக்குபவை.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் மணக்குடவர் முதலிய பத்து அறிஞர்கள். அவர்களுள் புகழ் பெற்றவர் பரிமேலழகர். வடமொழி நூல்களின் கருத்துகளைத் தழுவியும் ஒப்பிட்டும் உரை எழுதும் போக்கு உடையவர் அவர். அதனால் சில இடங்களில் நூலாசிரியரின் உண்மைக் கருத்தை உணரமுடியாமற் போயினும், பல இடங்களில் திருக்குறளின் பொருளாழத்தையும் நயத்தையும் நன்கு புலப்படுத்தியவர் அவர்.
பரிமேலழகர் (பதினான்காம் நூற்றாண்டில்) இரண்டு பழைய நூல்களுக்கு உரை எழுதியவர். பரிபாடல், திருக்குறள் என்பன அவருடைய உரை பெற்ற இரண்டு நூல்கள். திருக்குறளுக்கு எழுதிய உரையாலேயே அவர் புகழ்பெற்று விளங்குகிறார். தமிழில் உள்ள உரையாசிரியர்களுள் அவரே மிகச் சிறந்தவர். அவர் வடமொழி, தமிழ் ஆகிய இருமொழிப் புலமையும் நிரம்பியவர்; நுட்பமாகப் பொருளுணர்ந்து ஆழ்ந்து சிந்தனை செய்து அரிய கருத்துகளை எல்லாம் விளக்குவதில் வல்லவர். அவருடைய திருக்குறள் உரையிலும் சில சிறு குறைகள் உள்ளன. ஆயினும் அவர் ஆழ்ந்து கண்டு உணர்த்தியுள்ள நயங்களும் நுட்பங்களும் கணக்கற்றவை.