தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 196 -

இல்லாதவற்றைக் கற்பனை செய்து பாடும் புதுமை வளர்ந்தது. வடநூல்களின் கதைகளையும் மரபுகளையும்மட்டும் அல்லாமல், வடமொழிச் சொற்களையும் மிகுதியாகக் கையாளத் தொடங்கினார்கள். சிறப்பாக, சமயத்தொடர்பான வாதங்களையும் கருத்துகளையும் எடுத்துரைக்குமிடத்தில் வடமொழிச் சொற்களைத் தயங்காமல் கலந்தனர். மணிமேகலையின் சமயவாதம் நிகழும் பகுதியிலேயே இதன் தொடக்கத்தைக் காணலாம். சைனர் வடமொழி நூல்களைத் தழுவி எழுதியவற்றில் வடசொல் கலப்புப் பெருகியது. ஸ்ரீபுராணம் என்னும் சைனநூலின் நடையே ஒருவகைக் கலப்பு நடையாக அமைந்தது. தமிழ்ச் சொற்களும் வடமொழிச் சொற்களும் பாதிக்குப் பாதி கலந்தாற்போல் அமைந்த அந்த நடையை வேண்டுமென்றே சமயச் சார்புள்ள புலவர்கள் போற்றத் தலைப்பட்டார்கள். ஆனால் இலக்கியமே நோக்கமாகக் கொண்டு கற்று உரைநூல்கள் எழுதிய அறிஞர்கள் ஏறக்குறைய அதே காலத்தில் வாழ்ந்தபோதிலும் அந்த மணிப்பிரவாள நடையில் எழுதவில்லை. மிகக் குறைந்த அளவில் ஒரு சில வடசொற்கள்மட்டுமே கலந்த செந்தமிழ் நடையிலேயே அவர்கள் தம் உரைகளை எழுதினார்கள். இளம்பூரணர், குணசாகரர், மயிலைநாதர் முதலானவர்கள் சைனர். பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார் முதலானவர்கள் சைவர். பரிமேலழகர் வைணவர். இவர்கள் எல்லோரும் சிறந்த தமிழ்த் தொண்டு புரிந்த அறிஞர்கள்; இவர்கள் எல்லோரும் மேற்குறித்த அறிஞர்களைப் போல் மணிப்பிரவாள நடையில் எழுதாமல், செந்தமிழ் நடையையே கையாண்டார்கள். திட்பநுட்பம் வாய்ந்த பழைய தமிழ் உரைநடைக்கு எடுத்துக்காட்டாக உள்ளவை இவர்களின் உரைகளே.

புராணங்கள் முதலியன

வடமொழியில் உள்ள புராணங்களைத் தமிழில் எழுதும் முயற்சி வளர்ந்தது. அவ்வாறு தரப்பட்ட புராணங்களுள் பெரியது பத்தாயிரம் செய்யுள் உடைய கந்தபுராணம். அது வடமொழியில் உள்ள சிவசங்கர சங்கிதையைத் தழுவிப் பதினாயிரத்துக்கு மேற்பட்ட செய்யுள்களால் தமிழில் எழுதியது ஆகும். முருகனின் பிறப்பு, வளர்ப்பு, திருவிளையாடல், சூரபத்மனுடன் நிகழ்த்திய போர், தெய்வயானையின் திருமணம், வள்ளியின் காதல் முதலியவைபற்றி விரிவாகப் பாடிய புராணம் அது. கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அதன் ஆசிரியர் பழைய தமிழ் இலக்கிய மரபுகளை விடாமல் போற்றியவர். வருணனைகளுக்குக் கற்பனை மெருகு ஏற்றிப் பாடுவதில் வல்லவர் அவர். கவிச் சுவை நிரம்பிய புராணம் ஆகையால் மற்றப் புராணங்களைவிட அது சிறந்து நிற்கிறது.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:02:21(இந்திய நேரம்)