தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 226 -

படிப்பவர் எழுதுவோர் பலமடங்கு பெருகினர் என்பதையும், இலக்கிய வளர்ச்சிக்கு அவை பெரிய தூண்டுகோலாக அமைந்தன என்பதையும் மறுக்க முடியாது.

சென்னைக் கல்விச் சங்கம் (The College of Fort St. George) என்ற ஓர் அமைப்பு (1812 - 1854) ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எல்லீஸ் என்பவரும் தமிழ் ஏடுகள் பலவற்றைத் தொகுத்த மக்கன்ஸி என்பவரும் ஆங்கில அதிகாரிகள். அவர்கள் அந்தச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டது அந்தச் சங்கம். அதில் தமிழ் ஆசிரியர்களாக இருந்தவர்களுள் முத்துசாமி பிள்ளை, தாண்டவராய முதலியார், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். முத்துசாமி பிள்ளை வீரமாமுனிவரின் (Rev. Beschi) தமிழ் அகராதியையும் மற்ற நூல்களையும் தேடிக்கொண்டு வந்து அச்சிட்டார். தாண்டவராய முதலியார் பஞ்சதந்திரக் கதையை மகாராஷ்டிரத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார் (1825). தமிழ் நாட்டில் வழங்கிய சில கதைகளைத் திரட்டிக் ‘கதாமஞ்சரி’ என்ற பெயரால் (1826) ஒரு நூல் எழுதி வெளியிட்டார். இவ்வாறு பல நூல்கள் வெளிவருதற்குக் கல்விச் சங்கம் காரணம் ஆயிற்று.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

மகாவித்துவான் என்று பெயர்பெற்றுச் சென்ற நூற்றாண்டில் பெரும்புலவராக விளங்கியவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815 - 1876). அவர் திருவாவடுதுறையில் உள்ள சைவமடத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டு அதன் ஆதீன வித்துவானாக விளங்கினார். பலர்க்குத் தமிழ் நூல்கள் கற்பித்து அவர்களைப் புலவர்கள் ஆக்கினார். பற்பல வகையான இலக்கிய நூல்கள் இயற்றினார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை : முருகன் பிள்ளைத்தமிழ், திருவிடைக்கழிக் குறவஞ்சி, சூதசங்கிதை, குடந்தைத் திரிபந்தாதி, அகிலாண்டநாயகி மாலை, அம்பலவாண தேசிகர் கலம்பகம், வாட்போக்கிக் கலம்பகம், திருவிடைமருதூர் உலா, சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது என்பவை. உறையூர்ப் புராணம், ஆற்றூர்ப் புராணம், திருக்குடந்தைப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், விளத்தொட்டிப் புராணம் முதலிய தலபுராணங்கள் பல அவர் இயற்றினார். அவர் நூல்கள் எல்லாம் சைவ சமயத் தொடர்பானவை. பக்திச் சுவை உள்ளவை. மிக வேகமாகச் செய்யுள் நூல்கள் இயற்றுவதில் வல்லவர் எனப் புகழ் பெற்றவர் அவர். தமிழில் மிகப்பல செய்யுள் நூல்கள் எழுதிய புலவர் அவரே. ஆயினும் அவருடைய புகழை இன்று காப்பாற்றிவருவது ஒரு சிறிய நூல்; சேக்கிழார் என்ற நூலாசிரியரைப்பற்றி அவர் இயற்றிய ‘சேக்கிழார்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:10:46(இந்திய நேரம்)